பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

330

பிரதாப முதலியார் சரித்திரம்

யிட்டு இருவருக்கும் ரத்தங் குத்தி வாங்கும்படி சொன்னார். அந்தப்படி இருவருடைய ரத்தமும் எடுத்து வெவ்வேறு பாத்திரங்களில் வைக்கப்பட்டிருந்தது. அந்த ராஜா தன்னுடைய குமாரன் கூட இருக்கும்போது வைத்தியரை அழைத்து அந்த இரண்டு பாத்திரங்களும் இருக்கிற ரத்தங்களில் எது நல்ல ரத்தமென்று பரிசோதித்துத் தெரிவிக்கும்படி சொன்னார். உடனே ராஜா தன் குமாரனைப் பார்த்து “நம்முடைய வம்சமும் ரத்தமும் மேலானது என்று எண்ணிக்கொண்டிருந்தோம். உன்னுடைய ரத்தத்தைப் பார்க்கிலும் வேலைக்காரனுடைய ரத்தம் மேலாயிருப்பதாக வைத்தியர் சொல்லுகிறார். அவன் நம்மைப் போல் கண்ட பதார்த்தங்களையெல்லாம் புசிக்காமல் மித போஜனம் செய்கிறபடியாலும், அவன் தேகப்பிரயாசைப் பட்டு ஜீவிக்கிற படியாலும், அவனுடைய ரத்தம் அதிக சுத்தமாய் இருக்கிறது. அப்படியிருக்க நம்முடைய ரத்தம் மேலானதென்று நாம் அகம்பாவம் அடைவது தகுமா?”” என்றார்.

ஒரு ஊரில் ஒரு பெரிய பிரபுவினுடைய சிகரத்துக்குச் சமீபத்தில் ஒரு நாணற்காடு இருந்தது. அது கூடை பின்னிவிற்கிற ஒரு ஏழைக்குச் சொந்தமாக இருந்தது. அந்தக் காட்டை விலைக்கு வாங்கவேண்டுமென்று அந்தப் பிரபு முயற்சி செய்தான். அந்த ஏழைக்கு அந்தக் காட்டைத் தவிர வேறு ஜீவனத்துக்கு மார்க்கமில்லாதபடியால் காட்டை விலைக்குக் கொடுக்க நிராகரித்தான். அந்தப் பிரபுவுக்குக் கோபமுண்டாகி, அந்த நாணல்களில் நெருப்பு வைத்து நிர்மூலமாக்கி அந்த ஏழையையும் அடித்து உபத்திரவஞ் செய்தான். எளியவன் ராஜாவினிடத்தில் முறையிட்டுக் கொண்டதனால் ராஜா பிரபுவை வரவழைத்து விசாரணை செய்தார். பிரபு அரசனைப் பார்த்து, “அந்த அற்பப் பயல் என்னுடைய