பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஏழைகள்‌ செல்வரைக்‌ காப்பாற்றுதல்‌

331

கௌரவத்தை எவ்வளவும் மதிக்காமற் போய்விட்டதால் அவனை நான் அடித்தது கிரமந்தான்” என்றான். அரசன் பிரபுவைப் பார்த்து “உன்னுடைய முப்பாட்டன் விறகு வெட்டிக் காலக்ஷேபஞ் செய்துவந்தான். பின்பு அவன் படைவீரனாகி சௌரிய பராக்கிரமங் காட்டியபடியால் என்னுடைய பாட்டனாருக்குச் சந்தோஷமுண்டாகி, அவனை மேம்படுத்தித் திரவியவந்தன் ஆக்கினான். உன்னுடைய முப்பாட்டன் ஆதியில் விறகுத் தலையனாயிருந்த போதிலும், பிறகு தன்னுடைய சுய சாமர்த்தியத்தினால் மேன்மையடைந்தான். நீ அவன் தேடின ஆஸ்தியை வைத்துக் கொண்டு சுய யோக்கியதையில்லாமல் காலங் கழிக்கிறாய்” என்றார். பிறகு அரசன் ஒரு மாலுமியைப் பார்த்து “இவர்கள் இருவரையும் ஒரு கப்பலில் ஏற்றிக்கொண்டு போய் ஒரு தீவில் நிர்வாணமாய் விட்டுவிடு. இவர்களில் எவன் சமர்த்தன் என்பதை அறிவோம்” என்றார். உடனே அந்தப் படி நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீவில் அந்தப் பிரபு வஸ்திரமில்லாமல் பனியிலுங் குளிரிலும் பட்ட அவஸ்தை மரணாவஸ்தைக்குச் சமானமாயிருந்தது. அந்த ஏழைக்கு ஒரு கஷ்டமும் தோன்றவில்லை. அவன் சில செடிகளைப் பிடுங்கி நார் உரித்துத் தனக்கும் அந்தப் பிரபுவுக்கும் வஸ்திரஞ் செய்துகொண்டான். அந்தத் தீவில் வசிக்கிற அநாகரிகமான காட்டு ஜனங்களுக்கு, அந்த எளியவன் கூடை முதலானது பின்னிக் கொடுத்தபடியால் அவர்களுக்குச் சந்தோஷமுண்டாகி அவனுக்கு உணவு முதலிய பதார்த்தங்கள் கொடுத்தார்கள். அவன் தானும் புசித்து அந்த வெறும் பிரபுவுக்குஞ் சாப்பாடுங் கொடுத்து ரக்ஷித்தான். அந்தப் பிரபு ஒரு வேலையுஞ் செய்யாமல் சும்மாயிருப்பதை அந்த மிலேச்சர்கள் அறிந்து அவனைக் கொல்ல ஆரம்பித்தார்கள். அப்போது அந்த எளியவன் சிபாரிசு செய்து பிரபுவை விடுவித்துப் பிராணப் பிரதிஷ்டை செய்வித்தான். உடனே பிரபுவுக்கு ஞானோதயம் உண்டாகி, அந்த எளியவன் இல்லாவிட்டால் அந்தத்,