பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

334

பிரதாப முதலியார் சரித்திரம்

முகம் கண்ணாடி யானதால், இதில் உங்கள் முகத்தைக் காணுகிறீர்கள்”” என்றான். ஆகையால் நியாயாதிபதி திருடனென்பதாயிற்று.

ஒரு வழக்காளி நியாயசபையிற் பேசிகொண்டிருக்கும் போது அவனை, அவனுடைய எதிரியின் வக்கீல் பார்த்து ”“நீ ஏன் நாய் போற் குரைக்கின்றாய்?”” என்றான். ”“திருட்டுப் பயலைப் பார்த்தால், நாய் குரைக்காதா?”” என்று அந்த வழக்காளி மறுமொழி சொன்னான். இதனால் வக்கீலைத் திருடன் ஆக்கிவிட்டான்.

ஒரு அரசனும் அவனுடைய மகனும் ஒரு விகடகவியை அழைத்துக்கொண்டு வேட்டைக்குப் போனார்கள். வேட்டை ஆடிக் கொண்டிருக்கும்போது மழை பிடித்துக்கொண்டு, ராஜாவும் அவர் மகனும் நனைந்து போய்விட்டார்கள்; நனைந்து போன அவர்களுடைய உடுப்புக்களைக் கழற்றி, ஒரு மூட்டையாகக் கட்டி விகடகவி தலைமேலே வைத்தார்கள். அவன் தூக்கிக்கொண்டு போகும் போது, ”இராஜாவும் அவர் மகனும், ”“விகடகவி ஒரு கழுதைப் பாரம் சுமந்து கொண்டு போகிறான்”” என்று பரிகாசமாகப் பேசிக்கொண்டு போனார்கள். விகடகவி அவர்களைத் திரும்பி பார்த்து ”“ஒரு கழுதை பாரந்தானா? இரண்டு கழுதைப் பாரஞ் சுமக்கிறேன்”,” என்று சொல்லி இராஜாவையும் அவர் மகனையும் கழுதைகள் ஆக்கிவிட்டான்.

தரித்திர னான ஒரு வித்துவான், ஒரு தனவான் வீட்டுக்குப் போய், அவனுக்கும் தனக்கும் ஒரு சாண் தூரம் இருக்கும் படியான சமீபத்தில் உட்கார்ந்தான். அந்தத் தனவான் கோபங்கொண்டு வித்துவானைப் பார்த்து, ““கழுதைக்கும் உனக்கும் என்ன வித்தியாசம்?”” என்றான். வித்துவான் ”“ஒரு சாண்தான் வித்தியாசம்”” என்று அளந்து காட்டினான்.