பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

350

பிரதாப முதலியார் சரித்திரம்

தாயிருக்கிறது. எங்களுடைய ஊருக்குப் போகலாமென்றால், கடலும் மலைகளுஞ் சூழ்ந்த விக்கிரமபுரியை விட்டு இன்ன மார்க்கமாய்ப் போகிறதென்று தெரியவில்லை. அரண்மனையில் எங்களைச் சூழ்ந்திருக்கிறவர்கள் எல்லாரும் மணமுரசு கேட்டுச் சந்தோஷிக்கிறவர்களா யிருந்ததால் நானும் ஞானாம்பாளும் சகல சங்கதிகளையும் கலந்து தாராளமாய்ப் பேசவும் சந்தர்ப்பம் இல்லாமல் போய் விட்டது.

ஒருவரையுங் கூட அழைத்துக்கொண்டு போகாமல் நானும் ஞானாம்பாளும் விடிவதற்குமுன் எழுந்து சில சமயங்களில் வெளியே உலாவப் போகிறது வழக்கமாயிருந்தது. நாங்கள் ஆதியில் விக்கிரமபுரிக்கு வந்தபோது ஏறி வந்த மலையின்மேல் ஏறி உலாவுவதும், அந்த மலைமேலிருக்கிற அரண்மனையில் இரண்டொரு நாள் வசிப்பதும் வழக்கமாயிருந்தது. அந்த வழக்கப்படி போகிறவர்கள் போல் நானும் ஞானாம்பாளும் ஒரு நாள் நடுச்சாமத்தில் எழுந்து வேறொருவரையுங் கூட அழைத்துக்கொண்டு போகாமல் நாங்கள் மட்டும் புறப்பட்டுப் போய் அந்த மலைமேல் ஏறினோம். ஏறின உடனே நான் ஞானாம்பாளைப் பார்த்து ““இனிமேல் இந்த ஊரில் இருப்பது சரியல்ல; ஆனால் நம்முடைய ஊருக்காவது ஆதியூருக்காவது எந்த மார்க்கமாய்ப் போகிறதென்று தெரியவில்லை. நாம் முன்னே வந்த வழியாய்ப் போகலா மென்றால், துஷ்ட மிருகங்கள் நிறைந்த காடுகளைத் தாண்டி எப்படிப் போகக்கூடும்?“” என்றேன். ஞானாம்பாள் என்னைப் பார்த்து ““இந்த ஊரிலிருந்து பெண்ணும் பெண்ணுங் கலியாணஞ் செய்துகொள்வதைப் பார்க்கிலும் அந்த மிருகங்களுடன் வாசம் செய்வது சுலபமாய்த் தோன்றுகிறது“” என்றாள். அவள் மறுபடியும் என்னைப் பார்த்து ““நாம் முன்னேறிவந்த மலையின் தென்புறத்து வழியாக இறங்கிப் பார்ப்போம். கடவுளுடைய கிருபையால் அந்தக் காடுகளைக் கடந்து போவதற்குத் தக்க மார்க்கங் கிடைத்தாலும் கிடைக்கும்”” என்றாள்.