பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

352

பிரதாப முதலியார் சரித்திரம்

தும் முதலிய சகல சங்கதிகளையும் நான் வழியில் வரும்போதே, தேவராஜப் பிள்ளைக்கும் கனகசபைக்கும் தெரிவித்தேன். ஞானாம்பாள் புருஷ வேஷம் பூண்டுகொண்டு அரசாண்ட வகையைக் கேள்விப்பட்டு, அவர்கள் மிதமில்லாத ஆச்சரியமும் ஆநந்தமும் அடைந்தார்கள். ஞானாம்பாளைப் புருஷனென்று நினைத்து அந்த ராஜகன்னிகையாகிய ஆநந்தவல்லி இச்சைப் பட்டதும் அவர்கள் இருவருக்கும் விவாகம் செய்வதற்காக முகூர்த்தங்கள் குறிக்கப்பட்டதும், அதற்காகத் தப்பி நாங்கள் ஓடி வந்ததும் கேள்விப்பட்டுத் தகப்பனும் பிள்ளையும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். பொழுது விடியவும் விடியாமலிருக்கவும் நான் பாடினதும் கேள்விப்பட்டவுடனே அவர்கள் ஆடியாடிக்கொண்டு சிரித்த சிரிப்பினால் நாங்கள் ஏறியிருந்த பண்டி கலகலத்துப் போய் விட்டது.

அவர்களுடைய சிரிப்பு அடங்கின பிறகு, என்னுடைய தாய் தந்தையர் மாமனார் மாமியார் முதலியவர்களைப் பற்றி விசாரித்தேன். தேவராஜப் பிள்ளை என்னைப் பார்த்துச் சொல்லுகிறார்:- “நீங்கள் இருவரும் காணாமற்போன சமாசாரத்தை உடனே அவர்களுக்குத் தெரிவித்தேன். அவர்கள் சகிக்கக்கூடாத துக்கம் உடையவர்களாய் ஆதியூருக்கு வந்தார்கள். இந்தக் காட்டு வழியாக அந்த யானை உங்களிருவரையுந் தனித்தனியே தூக்கிக்கொண்டு போனதைப் பார்த்ததாகச் சிலர் சொன்னபடியால் உங்களைத் தேடுவதற்காக இந்தக் காடுகளையெல்லாம் அழித்து நிர்மூலஞ் செய்ததுமின்றி மிருகங்களையும் கொன்று நாசஞ் செய்துவிட்டோம். இப்போது நாங்கள் மலைகளையும் அரணியங்களையும் அணுஅணுவாய் ஆராய்ந்து பார்த்தோம். இன்னமும் உங்களைத் தேடிப் பார்ப்பதற்காகவே நடுக்காட்டில் கூடாரம் அடித்துக்கொண்டு இவ்விடத்தில் வாசமாயிருந்தோம். உங்கள் தாய் தந்தையர், மாமனார், மாமியார் முதலானவர்களும்