பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

366

பிரதாப முதலியார் சரித்திரம்

கண்டேன். கவலை யெல்லாம் விண்டேன். உள்ளம் பூரித்தேன். உடலம் பாரித்தேன். பரமாற்புதமாக ஞானாம்பாளைப் பிழைப்பித்த ஜகதீசனுடைய பெருங் கருணையை நினைந்து நினைந்து ஆநந்தக் கண்ணீர் சொரிந்து அடிக்கடி மானச பூஜை செய்தேன்.

நாங்கள் எல்லாருந் துக்கக்கடலினின்று கரையேறி ஆநந்த சமுத்திரத்தில் ஆடிக்கொண்டிருக்கும்பொழுது, ஆநந்தவல்லியும் அவளுடைய பரிவாரங்களும் வந்து சேர்ந்தார்கள். ஞானாம்பாள் இறந்த செய்தி கேட்டது முதல் ஆநந்தவல்லி அழுதழுது முகம் வீங்கிப்போயும் தேகம் இளைத்துப்போயும் இருந்தாள். ஞானாம்பாள் உயிரோடிருப்பதைப் பார்த்தவுடனே ஆநந்தவல்லி என்கிற பெயர் அவளுக்கே தகும் என்று சொல்லும்படியாகப் பிரமானந்தம் அடைந்து தேக பரவசம் ஆனாள். பிறகு ஆண்டிச்சியம்மாளும் அவளுடைய புருஷன், பிள்ளை முதலானவர்களும் வந்து எங்களுடைய சந்தோஷத்தைப் பாகித்துக் கொண்டார்கள். அவர்கள் எல்லாரையும் நாங்கள் ஒரு மாசம் வரைக்கும் நிறுத்தி வைத்துக்கொண்டு, ஞானாம்பாள் பிழைத்ததற்காகத் தினந்தோறும் தேவாராதனைகளும், ஏழைகளுக்குத் தானதர்மங்களுஞ் செய்து வந்தோம்.

பல நாளாயினபின் ஞானாம்பாள் ஆண் வேஷம் பூண்டு அரசாங்க பாவனையாக இப்போது காட்டவேண்டுமென்று ஞானாம்பாளை என் பாட்டியார் முதலானவர்கள் வேண்டினார்கள். ஞானாம்பாளுக்கு எவ்வளவும் இஷ்டமில்லா விட்டாலும் பல பெயர்களுடைய நிர்ப்பந்தத்தினால் ஒரு நாள் ஞானாம்பாள் அரசனைப் போல வேஷம் பூண்டுகொண்டாள். சாக்ஷாத் ராஜவடிவாகவே தோன்றின ஞானாம்பாளைப் பார்த்து எல்லாரும் அதிசயித்துக் கொண்டிருக்கும்போது ஆநந்தவல்லி அகக்களிப்புடனே வந்து ஞானாம்பாளைப் பார்த்து ““அக்கா! என்னை வேண்டி நீங்கள் ஆணாகவே இருந்து விடுங்கள்.