பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

பிரதாப முதலியார்‌ சரித்திரம்‌

படிப்பது சரியல்லவென்று, என் மாதா அபிப்பிராயப்படி எங்களுடைய சம்பந்தி முதலியார் வீட்டில், அவருடைய மகளோடுகூட வேறொரு தகுந்த உபாத்தியாரிடத்தில், நானும் கனகசபையும் படிக்கும்படி திட்டம் செய்தார்கள். அன்று முதல் என் படிப்பும் பிழைத்தது; கனகசபை முதுகும் பிழைத்தது. கனகசபையிம் தகப்பனார் சாந்தலிங்கம் பிள்ளையை என் தாயார் கைவிடாமல், அவரை எங்கள் குடும்பத்தில் பிரதான காரியஸ்தராக நியமித்து, அவரையும் அவருடைய குடும்பத்தையும் சம்ரட்சணை செய்து வந்தார்கள்.

சம்பந்த முதலியார் யாரென்றால், அவர் என் தாயுடன் பிறந்த அம்மான். அவருடைய பாட்டனார், என்னுடைய பாட்டனாரைப் போலவே கருநாடக ராஜாங்கத்தில் உத்தியோகஞ்செய்து அநேக திரவியங்களை ஆர்ஜித்துக் கொண்டு சத்தியபுரியில் வந்து வசித்தார்.அவருடைய குமாரன் சந்திரசேகர முதலியாருக்குச் சம்பந்தி முதலியாரும் என் தாயாரும் சந்ததிகள். அவர்களுக்கும் எங்களுக்கும் நெடுங்கால அநுபந்தம். மேற்படி சம்பந்தி முதலியாரும், எங்களைப் போலவே தனத்தில் மிகுந்தவர். அவருக்கு வெகு காலம் பிள்ளையில்லாமலிருந்து, பிற்பாடு ஒரு பெண்குழந்தை பிறந்தது. அந்தப் பெண்ணுக்கு ஞானாம்பாள் என்று நாமகரணம் செய்தார்கள். உலகத்திலிருக்கிற அழகுகளெல்லாம் கூடி ஒரு வடிவம் எடுத்து வந்தாள் போல, அவள் அதிரூபலாவண்ணியம் உடையவள்; அவளுடைய குணாதிசயங்களை யோசிக்குமிடத்தில், ஞானாம்பாள் என்கிற பேர் அவளுக்கே தகும்! அவளுடைய பிதா சம்பந்தி முதலியார் பிரபலமான திரவியவந்தராயிருந்தும், செலவளிக்கிற விஷயத்தில் அவருக்குச் சமானமான தரித்திரர்கள் ஒருவருமில்லை. அவர் பிராணத் தியாகம் செய்தாலும் செய்வாரே அல்லாது பணத் தியாகம் செய்யமாட்டார். "கொடு" என்கிற வார்த்தையைக் கேட்டால், அவர் காதில் நாராசம் காய்ச்சி