பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

பிரதாப முதலியார்‌ சரித்திரம்‌

தமக்குச் சமானமானவர்கள் ஒருவரும் இல்லை என்கிற கர்வத்தோடும் கூடிய ஒரு பெரியவர், சம்பந்தி முதலியார் வீட்டுகு வந்திருந்தார்; அப்போது அவ்விடத்திலிருந்தவர்கள் ஞானாம்பாளைக் காட்டி "இந்தக் குழந்தை இவ்வளவு சிறு பிராயத்தில் அதிக தீக்ஷண்ணியம் உள்ளதாயிருக்கிறது" என்கிறார்கள். அதைக் கேட்ட அந்தப் பெரியவர் "சிறு வயதிலே புத்திசாலியா யிருக்கிற பிள்ளை, பிற்பாடு மட்டியாய்ப் போகிறது சகஜம்" என்றார். உடனே ஞானாம்பாள் அவரைப் பார்த்து "தாங்கள் சிறு பிராயத்தில் அதிக புத்திசாலியா யிருந்திருப்பீர்களென்று நினைக்கிறேன்" என்றாள். உடனே அவர் நாணமடைந்து அவருடைய கர்வத்தை விட்டு விட்டார்.

என் தாயார் உத்தரவுப்படி நானும் கனகசபையும் சம்பந்தி முதலியார் வீட்டுக்குப் போய், ஞானாம்பாளுடைய உபாத்தியாயராகிய கருணானந்தப் பிள்ளையிடத்தில் கல்வி கற்க ஆரம்பித்தோம். எங்களுடைய படிப்பைப் பரிசோதிப்பதற்காக, அந்த உபாத்தியாயர் எங்களைப் பார்த்து “உயிரெழுத்து எத்தனை, மெய்யெழுத்து எத்தனை?" என்று கேட்டார். அதற்கு உத்தரம் சொல்லத் தெரியாமல், நான் கனகசபை முகத்தைப் பார்த்தேன்.; அவன் ஆகாசத்தைப் பார்த்தான். பிற்பாடு ஏதாவது சொல்லித் தொலைக்க வேண்டுமே என்று நினைத்து "உயிரெழுத்து 50; மெய்யெழுத்து 100" என்றேன்.

உடனே உபாத்தியாயர் அதிகாரஞ் செய்து "நீ சொல்வது சரியல்ல. ஞானாம்பாளை அழைத்து வா" என்று உத்தரவு கொடுத்தார். நான் ஞானாம்பாளிடத்திலே போய், "உயிரெழுத்து எத்தனை? மெய்யெழுத்து எத்தனை?" என்று கேட்க, அவள் "உயிரெழுத்துப் பன்னிரண்டு, மெய்யெழுத்துப் பதினெட்டு" என்று சொன்னாள். "நான் உயிரெழுத்து ஐம்பது, மெய்யெழுத்து நூறு என்று அவ்வளவு அதிகமாய்ச் சொல்லியும்