பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஞானாம்பாள்‌ மதி நுட்பம்‌

23

உபாத்தியாயர் ஒப்புக் கொள்ளவில்லையே? நீ குறைத்துச் சொல்லுகிறதை அவர் ஒப்புவாரா?" என்று சொல்லி அவளை அழைத்துக் கொண்டுபோய் உபாத்தியாயர் முன்பாக விட்டேன். அவள் அவரிடத்திலும் முன் சொன்னபடியே சொன்னாள். உபாத்தியாயர் அவள் சொன்னதுதான் சரியென்று எங்களுக்குத் தெரிவித்தார். இவ்வகையாக நாங்கள் ஞானாம்பாளுக்கு வயதில் மூத்தவர்களா யிருந்தாலும் கல்வியில் அவளுக்குக் கனிஷ்டர்களா யிருந்தோம். நாங்கள் அவளுடன் வாசிக்க ஆரம்பித்தபோது, அவள் எடுத்த புஸ்தகம் வாசிக்கவும் அர்த்தம் சொல்லவும் பிழையில்லாமல் எழுதவும், கூட்டல், கழித்தல், பெருக்கல் முதலான கணக்குகள் பார்க்கவும் திறமையுள்ளவளா யிருந்தாள். "பிள்ளை பெற்றவளைப் பார்த்து மலடி பெரு மூச்சு விட்டது போல் ஞானாம்பாளுடைய கல்வித் திறமையை அறிந்தவுடனே எங்களுக்குப் பொறாமையும் வெட்கமுமுண்டாகி, அன்று முதல் நாங்கள் கல்வியில் அதிகக் கவனம் வைக்கத் தொடங்கினோம். சீக்கிரத்தில் அவளை வித்தையில் வெல்ல வேண்டுமென்பது எங்களுடைய மனோரதமாயிருந்தது. நாங்கள் எவ்வளவு பிராயசப் பட்டுப் படித்தாலும் அவளும் மேலும் மேலும் படித்துத் தினந்தோறும் கல்வியில் அபிவிருத்தி அடைந்து வந்தபடியால், அவளுடைய ஓட்டத்தைப் பிடிக்க எங்களால் முடிய வில்லை. எட்டி எட்டிப் பார்த்தும் எட்டாமையினால் கொட்டாவி விடத் துவக்கினோம். ஆயினும் அவளுடன் சேர்ந்து படிக்கும்படியான பாக்கியம் எங்களுக்குக் கிடைத்த பிற்பாடு நாங்களும் கல்வியில் முயன்று கல்விமான்களென்கிற பெயரும் பிரதிஷ்டையும் பெற்றோம்.

ஞானாம்பாள் அதிகமாகப் படித்திருக்கின்றோ மென்கிற வித்தியா கர்வமில்லாமல், சுத்த நிகர்வ சிரோமணியா யிருந்தாள். நாங்கள் கல்வியில் தனக்குக் குறைவாயிருப்பதற்காக வருத்தப்படுகிறோமென்று தெரிந்து கொண்டு,