பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

பிரதாப முதலியார்‌ சரித்திரம்‌

முதலி, அவனுடைய இரண்டு குதிரைகள் பூட்டின நாலு சக்கர ரதத்தையும், சாரதியையும் சத்தியபுரிக்கு அனுப்பி, மங்கனூருக்குப்போயிருந்த உன் மாதாவின் தகப்பனாருக்குத் திடீரென்று மார்பு அடைத்துப் பேச்சு மூச்சு இல்லாமல், அத்தியாவஸ்தையாக இருப்பதாகவும், அதற்காக உன் தாயார் உடனே வரும்படி பண்டி அனுப்பியிருப்பதாகவும், அபாண்டமாய்த் தெரிவிக்கும்படி திட்டஞ் செய்தான்; அந்தப் பிரகாரம் சாரதி வந்து தெரிவித்தவுடனே, உன் தாயார் நிஜமென்று நம்பி, உடனே அவளும் அவளுடைய தோழியும் அந்த பண்டியில் ஏறிக் கொண்டு புறப்பட்டார்கள். அந்த பண்டி நீலகண்ட முதலியினுடைய பண்டி என்பது, உன் தாயாருக்குத் தெரியாது; தன் தகப்பனாருடைய பண்டிகளில் ஒன்றென்று நினைத்தாள்; இரண்டு குதிரைகள் கட்டின பண்டியைத் தொடர்ந்து கொண்டு ஓடுவது அசாத்தியமாகையால், வேலைக்காரர்கள் ஒருவரும் பண்டியுடன் கூடப் போகவில்லை; அந்த பண்டியைச் சாரதி அதி வேகமாய் நடத்திக் கொண்டு, தெற்கு ரஸ்தா வழியாகப் போனான். தெற்கு ரஸ்தாவில் ஒரு காதவழி தூரம் போய்ப் பிறகு மங்கனூருக்கு, மேற்கு ரஸ்தா வழியாகத் திரும்ப வேண்டியதாயிருக்க, அந்தப்படி மேற்கு ரஸ்தாவில் திரும்பாமல், பேராவூருக்குப் போகிற கிழக்கு ரஸ்தா வழியாக பண்டியை நடத்திக் கொண்டு போனான்.

பண்டியின் பலகணிகள் மூடப் பட்டிருந்தமையாலும், தகப்பனார் வியாதியாயிருக்கிறாரென்கிற துயரத்தினாலும், வண்டி கிழக்கு ரஸ்தா வழியாகப் போகிறதை உன் தாயார் கவனிக்கவில்லை. அந்தச் சாரதி சாராயப் பெட்டியைக் கிட்டத்தில் வைத்துக் கொண்டு, வழியிற் போகும்போதே சாராயத்தைக் குடித்துக் கொண்டு போனதால், அவன் அறிவு மயங்கி, அவனுடைய வெற்றிலைப் பாக்குப் பையைக் கை நழுவிக் கீழே விழும்படி விட்டு விட்டான்; அது விழுந்த வெகு நேரத்துக்குப் பிற்பாடு அவனுக்குத் தெரிந்து, அதைத் தேடிப் பார்ப்பதற்காக, அவன்