பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

பிரதாப முதலியார்‌ சரித்திரம்‌

தாவிப் பாய்ந்து ஓடின படியால், அவன் ஏறிய குதிரை வெகுண்டு மார்க்கத்தை விட்டுத் தாண்டிக் குதித்து, அவனை ஒரு படு குழியில் வீழ்த்திவிட்டுப் பக்ஷிபோல் பறந்து போய்விட்டது. இவ்வண்ணமாக உன் தாயார் தெய்வானுகூலத்தால் தப்பி மங்கனூர் போய்ச் சேர்ந்தாள்; அவ்விடத்தில் அவளுடைய தகப்பனார், அவளைக் கண்டவுடனே ஓடிவந்து அவளைத் தழுவிக் கொண்டு "அவள் ஊரை விட்டு இவ்வளவு சடுதியில் வந்ததற்குக் காரணம் என்ன" என்று கேட்க, அவள் நடந்த காரியங்களையெல்லாம் ஆதியந்தமாய்த் தெரிவித்தாள். அதைக் கேட்டவுடனே, அவள் தகப்பனாருக்கும் மற்றவர்களுக்கும் நீலகண்ட முதலி மீது பிரமாதமான கோபம் உண்டாகி, அவனைச் சிக்ஷிக்கத் தொடங்கினார்கள். எப்படி என்றால், தம்முடைய ஜாதியார் எல்லாரும் ஏகமாய்க் கூட்டங்கூடி, அவனைச் சாதிப் பிரஷ்டம் ஆக்கி, சுபாசுபங்கள் இல்லாமலும், நீர் நெருப்பு இல்லாமலும் விலக்கி விட்டார்கள். அவனுக்கு ஜாதியார் ஒருவரும் பெண் கொடாதபடியால், அவன் இன்னமும் பிரமசாரியாகவே இருக்கிறான். பிள்ளையாருடைய பிரமசாரித்துவம் நீங்கினாலும், அவனுடைய பிரமசாரித்துவம் நீங்காதென்பது நிச்சயம்.

மேற்படி சங்கதி நடந்த பிறகுதான் உன் தாயாரை, உன் தந்தையாகிய என் மைந்தனுக்கு விவாகம் செய்துவைத்தது. உன் தாயாரைப் போலச் சர்வ குணாலங்கிருத பூஷணிகள் உலகத்தில் இருப்பார்களா? அவள் எனக்குச் செய்யும் அன்பும், ஆதரவும், வணக்கமும், மரியாதையும் யாருக்காவது வருமா? எனக்கு நூறு புத்திரிகள் இருந்தாலும் இந்த விருத்தாம்பியக் காலத்தில் என் மருமகளைப் போல என்னை ஆதரிப்பார்களா? நான் வியாதியாய் இருக்கும் காலங்களில் எனக்குப் பத்திய பாகங்கள் செய்து கொடுத்து, உன் தாயாரே எனக்குச் சகல பணிவிடைகளையும் செய்து வருகிறாள். அவள் இல்லாவிட்டால் நான் செத்த இடம் புல் முளைத்துப் போயிருக்கும். அவள் அன்னமில்லா-