பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூம்பொழில்‌ விளையாட்டு

29

தவர்களுக்கு அன்னமும், வஸ்திரமில்லாதவர்களுக்கு வஸ்திரமும் கொடுத்து எத்தனையோ ஏழைக் குடும்பங்களைக் காப்பாற்றி வருகிறாள். அவளுக்காகவே தான் மழை பெய்கிறது; அவளுக்காகவே வெயில் எரிகிறது. அவளுக்குக் கடவுள் நீடிய ஆயுசைக் கொடுத்து உனக்கும் எனக்கும் என்னுடைய மகனுக்கும் மற்ற ஏழைகளுக்கும் அவள் ஆதரவாயிருக்கும்படி கிருபை செய்ய வேண்டுமென்பது என்னுடைய இடைவிடா பிரார்த்தனையா யிருக்கிறது" என்றார்கள். 'மாமியார் மெச்சிய மருமகள் இல்லை' என்கிற பழமொழிக்கு விரோதமாக என் தாயாருடைய சுகுணப் பிரபாவங்களை என் பாட்டியார் எடுத்துப் பிரஸ்தாபித்தவுடனே இப்படிப் பட்ட புண்ணியவதி வயிற்றிலே பிறந்தோமே என்கிற சந்தோஷத்தினால் நான் புளகாங்கிதமாகி ஆனந்தக் கண்ணீர் சொரிந்தேன். என்னுடைய மாதாவை உலக மாதாவென்றே நினைத்து, நித்தியமும் நான் பக்தி பண்ணிக் கொண்டு வந்தேன்.




5 ஆம் அதிகாரம்
சிங்காரத் தோட்டம், கனகசபை சரித்திரம்,
ஜலகண்டபுரம்

எங்கள் வீட்டுக்குப் பின்புறத்தில் எண்ணிகையில்லாத பல விருக்ஷங்கள் நிறைந்த சிங்காரத் தோட்டமும், பூஞ்சோலைகளும், தாமரைத் தடாகங்களும் இருந்தன. நாங்கள் படிக்கிற நேரம் போக மற்ற நேரங்களில் இந்திரனுடைய கற்பகச் சோலைக்குச் சமானமான அந்தச்