பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

பிரதாப முதலியார்‌ சரித்திரம்‌

சிங்காரத் தோட்டத்தில் விளையாடுகிறது வழக்கம். "அவப் பொழுதிலும் தவப்பொழுது" என்பது போல் விளையாடுகிற நேரத்தையும் ஞானாம்பாள் தர்ம விஷயங்களில் உபயோகப் படுத்தி வருவாள். எப்படியென்றால், சிங்காரத் தோட்டத்தில் பழுத்திருக்கிற மாங்கனிகள், தேங்கனிகள், வாழைக்கனிகள், பலாக்கனிகள், விளாங்கனிகள் முதலியவைகளைப் பறித்து ஏழைகளுக்குக் கொடுத்து வருவாள். அந்தத் தோட்டத்தில் இருக்கிற பக்ஷிகளை, ஒருவரும் பிடிக்காமலும், உபத்திரவஞ் செய்யாமலும் ஞானாம்பாள் பாதுகாத்து வந்தபடியால், அவைகள் மென்மேலும் பெருகி அவளைக் கண்டவுடனே ஆடிப்பாடி குதித்து விளையாடி மகோற்சவங் கொண்டாடும். சாதுக்களைக் கண்டால் சந்தோஷப் படாதவர்கள் யார்?

ஒரு நாள் நாங்கள் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கும்போது, ஒரு மரத்தில் அபூர்வமாய்ப் பழுத்திருந்த இரண்டு பழங்களை, ஞானாம்பாள் பறித்துக் கொண்டு வந்து என் முன்பாகவும் கனகசபை முன்பாகவும் வைத்துப் புசிக்கும்படி சொன்னாள். நான் கணக்கில் என் வல்லமையைக் காட்டுவதற்காக, இவளைப் பார்த்து "இவைகள் எத்தனை பழங்கள்?" என்றேன். அவள் "இரண்டு பழம்" என்றாள். நான் மூன்று பழம் என்றேன்; அவள் எப்படி? என்று கேட்க, அந்தப் பழங்களை வரிசையாக வைத்து எண்ணும்படி சொன்னேன்; அவள் "ஒன்று, இரண்டு" என்று எண்ணினாள்; உடனே "ஒன்றும் இரண்டும் மூன்றல்லவா?' என்றேன். அவள் "ஆம் ஆம்" என்று கனகசபையைப் பார்த்து "அண்ணா! நீங்கள் ஒரு பழம் தின்னுங்கள். நான் ஒரு பழம் எடுத்துக் கொள்கிறேன். அத்தான் ஒரு பழம் அருந்தட்டும்" என்று சொல்லி, அவள் ஒரு பழத்தைத் தின்றுவிட்டாள்; கனகசபை ஒரு பழத்தை விழுங்கிவிட்டான்; நான் ஒன்றுமில்லாமல் வெறும் வாயைச் சப்பினேன்: இவ்வகையாக என் கணக்கின் சாமர்த்தியத்தைக் காட்டப்போய்க் கனியை இழந்து ஏமாறினேன்.