பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

பிரதாப முதலியார்‌ சரித்திரம்‌

பார்த்து "இப்போது கவர்னர் இன்னாரென்று உனக்குத் தெரிகிறதா?" என்று கேட்க, உடனே கனகசபை "நீங்களாவது கவர்னராயிருக்க வேண்டும். அல்லது நானாவது கவர்னராயிருக்க வேண்டும். ஏனென்றால் நாமிருவர் மட்டும் உட்கார்ந்தபடி இருக்கிறோம்; நம்மைக் கண்டவுடனே எல்லாரும் எழுந்து தொப்பியைக் கழற்றிக் கொண்டு, நமக்கு வந்தனம் செய்கிறார்கள்" என்றான். சமயோஜிதமாகவும் சாதுரியமாகவும் கனகசபை சொன்ன மறுமொழியைக் கவர்னர் வியந்து கொண்டு, அவனுக்குக் கனகாபிஷேகம் செய்து அனுப்பினார்.

எப்போதும் விநோத சல்லாபப் பிரியனான கனகசபை சில நாளாக நன்றாய் விளையாடாமலும், பேசாமலும், துக்காக்கிராந்தனாய் மௌனஞ் சாதித்தான். "அதற்குக் காரணம் என்ன?" வென்று அவனை நான் பலமுறை கேட்டும் அவன் தக்க மறுமொழி சொல்லாமல் மழுப்பிவிட்டான். ஒரு நாள், சிங்காரத் தோட்டத்தில் கடைசியில் இருக்கிற ஒரு பெரிய தாமரைத் தடாகத்தின் ஓரத்தில், நானும் ஞானாம்பாளும் கனகசபையும் விளையாடிக் கொண்டிருந்த போது கனகசபை கால் தவறி அந்தத் தடாகத்தில் விழுந்து விட்டான்; அவன் நீந்தத் தெரியாதவனானதால், தன்னீரில் முழுகுகிறதும் கிளம்புகிறதுமாகத் தத்தளித்துக் கொண்டிருந்தான். நானும் நீந்தத் தெரியாதவனானதால் இன்னது செய்கிறது என்று தோன்றாமல் மலைத்துப் போய், ஸ்தம்பாகாரமாய் நின்றுவிட்டேன். ஞானாம்பாள் அலறிக் கொண்டு அங்கும் இங்கும் ஓடிப் பார்த்தும் உதவி செய்யத்தக்கவர்கள் ஒருவரும் அகப்பட வில்லை; எங்கள் வீடு வெகு தூரமானதால் அங்கே போய் யாரையாவது அழைத்துக் கொண்டு வருவதும் அசாத்தியமாயிருந்தது. இதை யெல்லாம் ஞானாம்பாள் ஒரு க்ஷணப் பொழுதில் ஆரோகித்துக் கொண்டு, சிங்காரத் தோட்டத்தின் கடைசியிலிருக்கிற திட்டி வாசலைத் திறந்து கொண்டு, வெளியே ஓடினாள். அவ்விடத்திலும் ஒருவரும்