பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

பிரதாப முதலியார்‌ சரித்திரம்‌

பிராயத்தில் ஒரு பிராணனைக் காப்பாற்ற நீ எவ்வளவோ முயற்சி செய்தாயே, உனக்குச் சமானமான புண்ணியவதிகள் உலகத்தில் இருப்பார்களா? இம்மையிலும் மறுமையிலும் சகல பாக்கியங்களையும் கடவுள் உனக்குத் தந்தருள்வாராக" என்று ஆசீர்வாதஞ் செய்து "சந்நியாசி பயணம் திண்ணையில்" என்பது போல் ஒரு நிமிஷத்தில் போய் விட்டார். நாங்கள் ஒன்றும் பேச நாவெழாமல் பிரமித்துப் போய் நின்றோம். "பதினாயிரம் பொன் பெற்ற ஆபரணங்களைக் கொடுக்கச் சம்மதித்த ஞானாம்பாளுடைய குணம் பெரிதா? அவைகளை வேண்டாமென்று நிராகரித்த சந்நியாசியாருடைய குணம் பெரிதா?" வென்று நான் சற்று நேரம் ஆலோசித்து, ஞானாம்பாளுடைய குணமே விசேஷமென்று தெரிந்து கொண்டேன்.

இதுவரையில் பேசச் சக்தி இல்லாமல் களைத்துப் போயிருந்த கனகசபைக்குக் கொஞ்சம் திடம் உண்டாகி, அவன் எங்களைப் பார்த்துத் "தாய் தகப்பன் இல்லாமல் நிராதரவாயிருக்கிற எனக்கு இவ்வளவு பெரிய உபகாரஞ் செய்து பிராணனைப் பிரதிஷ்டை செய்தீர்களே! அதற்கு என்ன பிரதி உபகாரம் செய்யப் போகிறேன்?" என்று பல விதமாக உபசார வார்த்தைகள் சொல்லத் தொடங்கினான். எனக்கு ஆச்சரியம் உண்டாகி, "உனக்குத் தாய் தந்தைகள் இருக்கும்போது, தாய் தகப்பனற்ற பிள்ளையென்று நீ சொன்னதற்குக் காரணமென்ன?" என்று நான் வினவ, கனகசபை கண்ணீர் விட்டு அழுதுகொண்டு சொல்லுகிறான். என் பிரியமான அண்ணனே! தங்கையே! என் பிராணனைக் காப்பாற்றின உங்களுக்கு இனிமேல் நான் உண்மை சொல்லாமலிருக்கலாமா? உங்களுடைய முந்தின ஆசான் ஆகிய சாந்தலிங்கம் பிள்ளையையும் அவருடைய பத்தினியையுமே, நான் தந்தை தாய் என்று நினைத்திருந்தேன். அவர் சில நாளைக்கு முன் கடின வியாதியா யிருந்தபோது இனிமேல் ஜீவதசைக்கு ஏதுவில்லையென்று நினைத்துக் கொண்டு, என்னை ரகசியத்தில் கூப்பிட்டு "அப்பா! குழந்தாய்! உனக்குத் தெரியாமல்