பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனகசபை பிறப்பு வளர்ப்பு வரலாறு

35

இந்நாள் மட்டும் நான் மறைத்து வைத்திருந்த ஒரு ரகசியத்தை உனக்கு வெளிப் படுத்துகிறேன்; அஃதென்னவென்றால், நானும் என் பெண்சாதியும் உன்னைப் பெற்றவர்கள் அல்ல; இதற்குப் பன்னிரண்டு வருஷத்துக்கு முன் நீ ஆறு மாசக் குழந்தையாயிருக்கும்போது ஒருவன் உன்னைக் கொண்டுவந்து பிள்ளைக்குப் பால் வேண்டும் என்று கேட்டான். அதற்குக் கொஞ்ச நாளைக்கு முன் என் பெண்சாதிக்கு ஒரு குழந்தை பிறந்து இறந்துபோய். பால் வற்றாமல் இருந்ததால், அவள் உன்னை வாங்கி மார்பிலே வைத்து அணைத்தாள்; உடனே அவளுக்குப் பால் சுரந்து நீ சம்பூரணமாகப் பால் குடித்தாய். உன்னைக் கொண்டு வந்தவன், மறுபடியும் உன்னை எடுத்துக் கொண்டு போவதற்கு அவனால் கூடிய மட்டும் பிரயாசைப் பட்டும், நீ என் பெண்சாதியை விடாமல் அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதாய்; அவன் "இந்தப் பிள்ளை உங்களுக்கு வேண்டுமானால் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லிப் போய் விட்டான். இப்படிப்பட்ட அதி சௌந்தரியமான பிள்ளை, நமக்குக் கிடைத்ததே என்கிற ஆநந்தத்தினால், நீ யாருடைய பிள்ளையென்று அவனை விசாரியாமல் உன் மேலே நோக்கமா யிருந்துவிட்டோம். ஆனால் அவன் கேவலம் சாமானியன் ஆனதால், அவனுக்கு நீ பிள்ளை அல்லவென்று நிச்சயம்; அது முதல் உன்னைக் கண்ணுக்குக் கண்ணாகவும், பிராணனுக்குப் பிராணனாகவும் வளர்த்தோம்; நீயும் சொந்தப் பிள்ளையைப் பார்க்கிலும் நூறு பங்கு அதிகமாகச் சகல விதத்திலும் திருப்தியாக நடந்து வந்தாய்; இனி நான் பிழைப்பேனென்கிற நம்பிக்கை இல்லாமையினாலும், சில விசை உன் மாதா பிதாக்கள் உன்னைத் தேடி வந்தால் உனக்கு உண்மை தெரிந்திருக்க வேண்டியதானதினாலும், இந்தக் காரியத்தை உனக்குத் தெரிவித்தேன். இப்போது நம்மை ஆதரிக்கிற சுந்தரத்தண்ணியாரும், அவருடைய பர்த்தாவும், உன்னையும் உன்னுடைய செவிலித்தாயையும் கைவிடார்கள். நீ மனம் வருந்தாதே" என்றார்.