பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனகசபை பெற்றோர்‌ வருகை

37


6 ஆம் அதிகாரம்
அநாதப்‌ பிள்ளைக்கு அன்னையும்‌ பிதாவும்‌
கிடைத்தல்‌

தேவராஜப்‌ பிள்ளை சரித்திரம்‌—ஒரு கெட்ட சகோதரன்‌

இவ்வாறு சில நாட்கள் கழிந்த பின்பு, ஒரு நாள் நானும் ஞானாம்பாளும், கனகசபையும் தெருத் திண்ணையில் வாசித்துக் கொண்டிருந்தோம். அப்போது அநேக ஆனைகளும், குதிரைகளும், வண்டிகளும், கொடிகளும், குடைகளும், காலாட்களும் நானாவித வாத்திய முழக்கத்துடன் தெருவில் வந்து எங்கள் வீட்டுக்கு எதிரே நின்றன. அவைகளின் மத்தியில், நான்கு குதிரைகள் கட்டின சொர்ணமயமான ரதத்திலிருந்து ராஜ வடிவான ஒரு புருஷனும், ஸ்திரீயும் இறங்கினார்கள். தடாகத்தில் விழுந்தபோது கரையேற்றி விட்ட சந்நியாசியாரும் அவர்களுக்கு முன்னே வந்து கனகசபையைக் கையாலே தொட்டுக் காட்டினார். உடனே மேற்படி ரதத்திலிருந்து இறங்கின அந்த மஹா புருஷன். கனகசபையைத் தழுவி மார்போடு அணைத்துக் கொண்டு "என் மகனே! என் கண்மணியே! என் குலதிலகமே! இந்நாள் வரைக்கும் உன்னைப் பார்க்கக் கொடுத்து வைக்காமற் போனேனே! என்ன பாவமோ உன்னைப் பிரிந்திருந்தேனே! இப்போதாவது உன்னைக் காணாமல் கண்டேனே! இனி மேல் என்னைப் போலே பாக்கியசாலிகள் உண்டா?" என்று சொல்லி, தேகபரவசமாய் ஆனந்தக்கண்ணீர் சொரிந்தார். அவருடன் வந்த ஸ்திரீயும் கனகசபையைக் கட்டித் தழுவிக் கொண்டு "மகனே! மகனே!" என்று பிரலாபித்தாள். பிற்பாடு அந்த மஹாபுருஷன் ஞானாம்பாளை நோக்கி "ஓ! பாக்கியவதியே! ஸ்திரீ ரத்னமே! குண பூஷணியே! நீயே தர்மாவதாரம்! உனக்குச் சமானமான குணவதிகள் இந்த உலகத்தில் இருப்பார்களா? தடாகத்தில் விழுந்த என் புத்திரனை நீ அல்லவோ ரக்ஷித்தாய்? உன்னால்