பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

பிரதாப முதலியார்‌ சரித்திரம்‌

நான் தனியாக ஒரு அறைக்குள்ளே போய், அதனை வாசிக்கத் தொடங்கினேன்; அது வருமாறு:—

"ஐயோ! அண்ணா! நான் உங்களுக்குப் பரம சத்துருவே தவிரத் தம்பியல்ல; தாங்கள் பங்காளத்திலிருந்தபோது தங்களுடைய பிள்ளை வியாதியால் இறந்து போனதாக நான் தங்களுக்கு எழுதினது சுத்த அபத்தம். தங்களுக்குப் பிறகு எனக்குப் பட்டம் நிலைக்க வேண்டியதற்காகத் தாங்கள் ஊரில் இல்லாத காலத்தில், தங்களுடைய பிள்ளையை எப்படியாவது தொலைத்துவிட வேணுமென்று என் பிரிய நேசனாகிய முத்துவீரனுக்குச் சொன்னேன்; அவன் அப்படிச் செய்யக் கூடாதென்று, எனக்குப் பல வகையில் போதித்தான்; நான் பிடிவாதஞ் செய்ததனால், அவன் பிள்ளையை வாங்கிக் கொண்டு "உன் மனதுப்படி செய்கிறேன்" என்று சொல்லிப் போய்விட்டான்; அந்தச் சமயத்தில் அந்தப் பிள்ளைகளுக்குப் பால் கொடுத்தவளுடைய பிள்ளை சுழி மாந்தத்தினால் இறந்து போனதால், அவளைப் பொருள் மூலம் ஸ்வாதீனப் படுத்திக்கொண்டு, அவள் பிள்ளையைத் தங்கள் பிள்ளையென்று பேர் பண்ணி, சகலரும் அறிய இராக் காலத்தில் அந்தப் பிள்ளையைப் பிரேத ஆலயத்தில் ஆடம்பரமாக அடக்கஞ் செய்தோம். இந்த ரகசியம் எனக்கும் அந்தப் பாற்காரிக்கும் அவளுடைய புருஷனுக்கும் மட்டும் தெரியும். தங்களுடைய புத்திரனைக் கொண்டு போன முத்துவீரனை வெகு காலமாக நான் பார்க்கவில்லை; அவன் உலகத்தைத் துறந்து சந்நியாசியாகப் போனதாகக் கேள்விப்பட்டேன்; அவன் தங்கள் பிள்ளையைக் கொலை செய்திருப்பானென்றே எண்ணியிருந்தேன். முந்தாநாள் வந்த சந்நியாசி, தங்கள் பிள்ளையைக் கொலை செய்யவில்லையென்றும், சத்தியபுரியில் சாந்தலிங்கம் பிள்ளை வீட்டில் அந்தப் பிள்ளை வளருவதாகவுஞ் சொன்னான்; அந்தச் சந்நியாசியை இங்கே இருக்கும்படி சொல்லியிருக்கிறேன்; அவனை விசாரித்தால் ஆதியோடு அந்தமாகச்