பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜோதிட சாஸ்திரி பிதற்றுரை

45

சத்தை வரச்சொன்னால் வராதா? காமதேனுவைக் கூப்பிட்டால், அது வந்து நாங்கள் சொன்னபடி கேளாதா? மகமேருகிரி எங்கள் ஸ்வாதீனமல்லவா?" என்றார். அப்போது அவ்விடத்தில் கட்டியிருந்த ஒரு வேட்டை நாய் சாஸ்திரியாரைப் பார்த்துக் குலைத்துக் கொண்டிருந்தது. அவர் அந்த நாயைப் பார்த்து "கரடி, புலி முதலிய துஷ்ட மிருகங்களின் வாய்களை மந்திரத்தினாலே கட்டிவிடுகிற நான், இந்த நாயின் வாயைக் கட்டி, அது குலைக்காமலும் கடிக்காமலும் செய்ய மாட்டேனா? என்று கையை நீட்டிக் கொண்டும் தலையை ஆட்டிக் கொண்டும் சொல்லிக் கொண்டிருந்தார். உடனே அந்த நாய்க்குக் கோபமுண்டாகி, கட்டியிருந்த சங்கிலியை அறுத்துக் கொண்டு, ஒரே பாய்ச்சலாய் சாஸ்திரியார் மேலே பாய்ந்து அவர் தேகத்தைப் பக்ஷணஞ் செய்ய ஆரம்பித்தது. சாஸ்திரியார் "ஐயையோ! போனேனே! போனேனே!" என்று கூவத் தலைப்பட்டார். உடனே எங்கள் உபாத்தியாயர் ஒரு கழியை எடுத்துக் கொண்டு நாயைத் துரத்திச் சாஸ்திரியாரை விடுவித்து "மந்திரத்தினால் அந்த நாயின் வாயைக் கட்டி விடக்கூடாதா?" என்று சாஸ்திரியாரைக் கேட்டார். அவர் "ஐயா! நாய் கடித்த உபத்திரவம் பெரிதாயிருக்கிறது; அதற்குச் சரியான பரிகாரஞ் செய்தால் உண்மையைச் சொல்லுகிறேன்" என்றார். உடனே எங்கள் ஆசிரியர் தகுந்த பக்குவஞ் செய்து வலியைச் சாந்தப் படுத்தினார்.

சாஸ்திரியாருக்குச் சந்தோஷம் உண்டாகிச் சொல்லுகிறார். எங்கள் வித்தையெல்லம் சுத்தப் பொய்; உலகத்தில் உதரநிமித்தம் பல பேர் பல வேஷங்கள் பூண்டுகொண்டு ஜீவிக்கிறார்கள்; அப்படியே நானும் இந்த வேஷம் போட்டுக் கொண்டு திரிகிறேன்; என்னுடைய சொந்த விஷயத்தில் சாஸ்திரம் பலிக்காமலிருக்கும்போது அன்னியர்கள் விஷயத்தில் கேட்கவும் வேண்டுமா? எனக்கு நாலு புத்திரிகள்; சாஸ்திர சகுனங்கள்