பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சோதிடப்‌ பைத்தியம்‌

47

மேல் சாஸ்திரத்தைக் கட்டித் தூரத்தில் எறிந்துவிடச் சித்தமாயிருக்கிறேன்." என்றார். அவர் நிசம் சொன்னதற்காக, அவருக்குத் தகுந்தப் பிரயோசனஞ் செய்யவேண்டுமென்று எங்கள் போதகர் சொன்னதினாலே, அவருக்கு நானும் ஞானாம்பாளும் பத்து ரூபாய் கொடுத்து அனுப்பினோம். இவ்விதமாக ஜோசியர் காரியம் ஆசியமாக முடிந்தது; எனக்குச் சோதிட விஷயத்திலிருந்த பைத்தியமும் தீர்ந்தது.

சாஸ்திரியார் போனபின்பு, உபாத்தியாயர் எங்களைப் பார்த்து "சோதிடம் பொய்யென்று, அந்தச் சாஸ்திரியே ஒப்புக்கொள்வதால், இனிமேல் உங்களுக்கு வேறே சாக்ஷியம் வேண்டுவதில்லை. இனிமேல் வரும் காரியங்கள் நமக்கு முந்தித் தெரியாதபடி, நம்முடைய நன்மைக்காகவே சுவாமி மறைத்து வைத்திருக்கிறார். இனிமேல் வருகிற துன்பம், நமக்குத் தெரியாமலிருப்பதால், அந்தத் துன்பம் வருகிற நிமிஷம் வரையில் நாம் துக்கமில்லாமலிருக்கிறோம். அது முந்தி நமக்குத் தெரிந்திருக்குமானால் முந்தியுந் துக்கம் பிந்தியுந் துக்கம்; எக்காலத்திலும் துக்கமாக முடியும் அல்லவா? அப்படி நன்மை வருகிறதும் நமக்கு முந்தித் தெரியாமலிருந்து வந்தால், நமக்கு அதிக சந்தோஷத்துக்கு இடமாகும். அப்படியில்லாமல் முன்னமே தெரிந்திருக்குமானால் சந்தோஷம் மிகவும் குறைந்துபோகும். தீர்க்க தரிசனம் என்பதே, இப்போது உலகத்தில் இல்லை. அந்த மேலான வரத்தை எத்தனையோ புத்திமான்களும் இருக்க, அவர்களுக்குக் கொடாமல் இந்த சாஸ்திரிகளைப் போலொத்த சர்வ மூடர்களுக்கும், குடுகுடுப்பைக் காரர்களுக்கும், கோணங்கிக்காரர்களுக்கும், குறத்திகள் முதலானவர்களுக்கும் சுவாமி கொடுத்திருப்பாரா? பின்னும் நமக்கு வருகிற நன்மை தீமைகள், நமக்குத் தெரியாமலிருக்க அசேதன ஜந்துக்களாகிய பல்லிகளுக்கும் பட்சிகளுக்கும் தெரிந்து, அவைகள் நமக்குத் தெரியப்படுத்தக்கூடுமா?" என்று