பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

பிரதாப முதலியார் சரித்திரம்

உபாத்தியாயர் செய்த பிரசங்கத்தைக் கேட்டவுடனே, என்னைப் பிடித்திருந்த சாஸ்திரப் பேய் பறந்தோடிவிட்டது.

எங்கள் கொல்லைக்குப் பின்புறத்தில் இருக்கிற சிங்காரத் தோட்டங்களின் மதிலுக்கு அப்பால், கொஞ்ச தூரத்தில் ஒரு பாழ் மண்டபமும், அதற்குப்பின் ஒரு விஸ்தாரமான காடும் இருந்தன. அந்தக் காட்டுக்கு அந்தப் பாழ்மண்டபத்தின் வழியாகத்தான் போகவேண்டும். சில காலத்துக்கு முன், அந்தப் பாழ் மண்டபத்தில் யாரோ ஒருவன் கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்டு இறந்துபோனதாகவும், அவன் பிசாசு ரூபமாகி அந்த மண்டபத்தில் வாசஞ் செய்வதாகவும், பின்னும் ஒரு சங்கிலிக் கறுப்பு ஒரு மரத்திலிருப்பதாகவும், எப்போதும் சங்கிலி ஓசை கேட்பதாகவும், அந்த மண்டபத்துக்குப் போன ஆடு மாடு முதலான ஜீவ ஜந்துக்கள் திரும்பி வராமல் பிசாசுகளுக்கு இரையாகி விடுவதாகவும் ஒரு வதந்தி பிறந்து, வெகு காலமாக அந்த மண்டபத்துக்காவது காட்டுக்காவது ஒருவரும் போக்குவரவு இல்லாமல் நின்றுவிட்டது. இராக் காலங்களில், அந்த இடத்தில் பயங்கரமான பல சப்தங்கள் கேட்கிறதும் உண்டு. உபாத்தியாயரிடத்தில் அதைப் பற்றித் தெரிவித்தேன்' அவர் "மனப் பேயே தவிர வேறு பேயில்லை; நீ என்னுடன் கூட வந்தால் காட்டுகிறேன்." என்றார். அவருடைய விவேகமும், தைரியமும் எனக்குத் தெரியுமாதலால் வேட்ட நாயையும் கையில் பிடித்துக் கொண்டு, அவரைத் தொடர்ந்து போனேன்; மண்டபம் சமீபித்தவுடனே, நான் பயப்படுவேனென்று அவர் என் கையைப் பிடித்துக் கொண்டு நடந்தார். உபாத்தியாயர் கை முன்னே இழுக்கப் பயம் பின்னே இழுக்கக் கொலைக் களத்துக்குப் போகிறவன் போல, திகில் கொண்டு நிர்ஜீவனாய் நடந்தேன். மண்டபத்துக்குள் நுழையும்போது நமனுடைய வாய்க்குள் நுழைவது போலிருந்தது; நாங்கள் மண்டபத்துக்குள் நுழைந்தவுடனே, கணக்கில்லாத பல