பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாழ்‌ மண்டபமும்‌ பேய்களும்‌

49

பட்சிகள் "கா, கூ" என்று சப்தித்துக் கொண்டு புறப்பட்டன; அந்தப் பட்சிகளுடைய எச்சங்களால், மண்டபத்தில் கால் வைக்க இடமில்லாமல் துர்நாற்றம் எங்கள் குடலைப் பிடுங்க ஆரம்பித்தது; உடனே காட்டைப் பார்க்கிறதற்காக, மண்டபத்தை விட்டுக் கீழே இறங்கினோம்; எங்களுக்கு முன் எங்கள் வேட்டை நாய் மிருக வாசனை பிடித்துக் கொண்டு, காட்டுக்குள் ஓட ஆரம்பித்தது; அதைக் கண்டவுடனே நரிகளும் ஓநாய்களும், காட்டுப் பூனை முதலான பல மிருகங்களும், நாலு பக்கங்களிலும் கத்திக்கொண்டு ஓடத் தலைப்பட்டன. நாங்கள் போகும்போது ஒரு ஓநாய், ஒரு ஆட்டைப் பிடித்துத் தின்றுகொன்றிருந்தது. அந்த ஓநாய் மேல் எங்கள் வேட்டை நாய் பாய்ந்து பிடித்துக் கொண்டு, எங்களுக்குப் பாதகாணிக்கை கொண்டுவருவது போல், எங்கள் முன்பாக ஓடிவந்தது. உடனே உபாத்தியாயர், என்னை நோக்கிச் சொல்லுகிறார்:- "இந்தக் காட்டைப் பார்த்தால், உலகம் உண்டானது முதல் மனுஷ சஞ்சாரம் இல்லாதது போலத் தோன்றுகிறது. யாரோ ஒருவன் துர்மரணமாய் இறந்து போனானென்கிற பயப் பிராந்தியினால் வெகு காலமாக ஒருவரும் இவ்விடத்தில் சஞ்சரிக்காதபடியால், பட்சிகளும் பல மிருகங்களும் அந்த மண்டபத்தையும், காட்டையும் தங்கள் வாசஸ்தலங்களாக ஆக்கிக் கொண்டன. அவைகளால் இரவில் உண்டாகிற சப்தங்களைப் பிசாசுகளுடைய சப்தங்களென்று மௌட்டியமாக நினைத்துக்கொண்டார்கள். இந்தக் கானகத்துக்குள்ளே பிரவேசிக்கிற ஆடுமாடுகளை மிருகங்கள் தின்றுவிடுவதை அறியாமல், பிசாசுகள் தின்றுவிடுவதாக நினைத்தார்கள். இவ்விடத்தில் இருக்கிற பலவகையான மரங்களின் இலைகள் காய்ந்துபோய்க் காற்றினால் அடிபட்டுக், கலகலவென்று சப்திப்பதைச் சங்கிலிக்கறுப்பன் என்று நினைத்தார்கள். அறிவில்லாத மிருகங்களும், பட்சிகளும் நிர்ப்பயமாய் வசிக்கிற இடத்தில், அறிவுள்ள மனுஷர் சஞ்சரிக்கப் பயப்படுவது

4