பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

பிரதாப முதலியார் சரித்திரம்

எவ்வளவு மௌட்டியம்?" என்று போதித்தார். அதற்குமுன் சோதிடப்பேய் பறந்ததுபோல் அன்றுமுதல் மனப்பேயும் பறந்துவிட்டது. அந்தக் காட்டை எங்களிடத்தில் சாசுவதக் குத்தகையாக ஒப்புக்கொண்டு அதை வெட்டித் திருத்திச் சாகுபடி செய்து, பயிரிட்டு அநுபவிப்பதுந் தவிர, அந்த மண்டபத்தில் அவரே குடும்ப சகிதமாய்க் குடியிருந்து வருகிறார்.

எங்கள் உபாத்தியாயரிடத்தில், நான் பல புத்திகளைக் கற்றுக்கொண்டதுபோலவே, என் தாயாரிடத்திலும் ஞானாம்பாளிடத்திலும் அநேக நற்குணங்களையும் கற்றுக்கொண்டேன். எந்தக் காலத்திலாவது அவர்களிடத்தில் கோபம், குரோதம், மூர்க்கம் முதலான துர்க்குணங்களை நான் கண்டதேயில்லை; எப்போதும் அவர்கள் பேசுவது மிருது பாஷையே தவிரக் கடூர வார்த்தைகளை அவர்களிடத்தில் நான் கேட்டதே யில்லை. அவர்கள் வாயிலிருந்து வருவதெல்லாம் உண்மையே தவிரப் பொய்யென்பது மருந்துக்குக் கூட கிடையாது. ஒருநாள் என் முகத்தைக் கடுகடுத்துக்கொண்டு, பல்லைக் கடித்துக்கொண்டு என் வேலைக்காரனைக் கோபித்தேன். அப்போது கூட இருந்த ஞானாம்பாள் ஒன்றும் பேசாமல் எழுந்துபோய் விட்டாள். பிறகு அவளை நான் கண்டு "ஏன் போய்விட்டாய்?" என்று கேட்க, “உங்களுக்குக் கோபம் வரும்போது, உங்களைப் பார்த்தால் எனக்குப் பயமாயிருக்கிறது; நீங்கள் கோப முகத்தோடு கண்ணாடியைப் பார்த்தால், உங்களுக்குத் தெரியும்" என்று சொன்னாள். நான் தனிமையாகப் போய்க் கோப முகத்துடனே கண்ணாடியைப் பார்த்தேன்; அப்போதிருந்த கோரம் எனக்கே சகிக்காமல் அன்று முதல் கோபத்துக்கு விடை கொடுத்துவிட்டேன். ஞானாம்பாள் எனக்கு இளையவளாயிருந்தாலும், அவளுடைய விநய காம்பிரியமும் நாகரிகமும் சுசீல ஒழுக்கமும் எப்படிப்பட்டவையென்றால், பெரியோர்கள் சமூகத்தில் இருக்கும்போது எவ்வளவு மரியாதையும் சிரத்தையும்