பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஞானாம்பாள்‌ நல்லொழுக்கம்‌

51

உண்டாகுமோ, அவ்வளவு மரியாதை அவளிடத்தில் இருக்கும்போதும் என்னை அறியாமலே உண்டாகும்.

அவள் ஸ்தோத்திரப்பிரியை அல்லவென்று சில திருஷ்டாந்தங்களால் நான் அறிந்துகொண்டேன். எப்படியெனில், ஒரு நாள் சிங்காரத்தோட்டத்திலிருந்து ஒரு ரோஜாப் புஷ்பத்தைப் பறித்து அவள் கையிலே கொடுத்து "உன்னுடைய முகம் இந்தப் புஷ்பத்துக்குச் சமானம்" என்றேன். அவள் "அந்தப் புஷ்பம் சீக்கிரத்தில் வாடிப்போவதுபோல, அழகும் சீக்கிரத்தில் அழிந்துபோகும்" என்றாள்; "அந்தப் பூவை உபமானித்தது சரியல்ல. உன் முகம் சந்திரனுக்குச் சமானம்" என்றேன். அவள் சற்று நேரம் சும்மா இருந்து, பிற்பாடு சொல்லத் தொடங்கினாள்; "சந்திரனுக்கு ஸ்வயம் பிரகாசம் இல்லையென்றும், சூரியனுடைய ஒளியினால் சந்திரன் பிரகாசிக்கிறதென்றும், நாம் புஸ்தகங்களில் வாசித்திருக்கிறோம். அப்படியே மனுஷர்களுடைய வடிவெல்லாம் சூரியனாகிய கடவுளிடத்திலிருந்து உண்டாவதால், அவரே ஸ்தோத்திரத்துக்குப் பாத்திரர்" என்று சொல்லிக்கொண்டு அப்பாற் போய்விட்டாள்; அன்று முதல் அவளை ஸ்தோத்திரம் செய்கிறதில்லையென்று பிரதிக்ஞை செய்துகொண்டேன்.

அதற்குச் சில நாளுக்குப் பின்பு, நானும் ஞானாம்பாளும் வழக்கப்படி சிங்காரத் தோட்டத்துக்கு விளையாடப் போனோம். நான் கொஞ்ச தூரத்தில் புஷ்பம் பறித்துக் கொண்டிருந்தேன். அவள் ஒரு மரத்து நிழலில், ஒரு சின்னவாத்தியப் பெட்டியை வைத்து வாசித்துக் கொண்டிருந்தாள். அந்தச் சப்தங் கேட்டவுடனே அவ்விடத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு துஷ்டக் காளை, அலறிக்கொண்டு சமீபத்திலிருக்கிற சித்திர மண்டபத்துக்கு ஒரு பக்கம் துரத்த, ஒரு பெரிய ஆட்டுக் கடா இந்தப் பக்கத்தில் துரத்த ஆரம்பித்தன. இப்படி இரண்டுக்கும் நடுவில் அகப்பட்டுக்