பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

பிரதாப முதலியார்‌ சரித்திரம்‌

கொண்டு அவள் அவஸ்தைப்படும்போது, நான் ஒரே ஓட்டமாய் ஓடி ஞானாம்பாளைத் தூக்கிச் சித்திரமண்டபத்து வெளித் திண்ணையின்மேல் ஏறிக்கொண்டேன். அந்தச் சித்திரமண்டபத்துத் திண்ணை அதிக உயரமானதாலும், அதன் படிகள் அந்தப் பக்கத்தில் இல்லாமல் வேறே பக்கத்தில் இருந்தமையாலும், அந்தச் சமயத்தில் நான் இல்லாமல் இருந்தால் அவளுக்குப் பெரிய அபாயம் நேரிட்டிருக்கும். இந்தச் சமாசாரம் ஞானாம்பாள் மூலமாக எங்கள் இரண்டு வீட்டாருக்கும் தெரிந்து, அவர்கள் ஒவ்வொருவரும் எனக்குச் செய்த ஸ்தோத்திரம் அபரிமிதமே. இராவணாதி அசுரர்களை நாசஞ்செய்து சீதையைச் சிறை மீட்டுக்கொண்டுபோன இராமருக்கு எவ்வளவு பிரதாபம் கிடைத்ததோ, அவ்வளவு பிரதாபம் எனக்கு வாய்த்தது.




8 ஆம் அதிகாரம்
கற்பலங்காரி சரித்திரம்

ஒரு நாள் எங்களுக்குப் பள்ளிக்கூடம் இல்லாத விடுமுறை நாளா யிருந்த படியால், நாங்கள் பழைய பாடங்களைப் படித்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது எங்கள் தாயார் வந்து எங்களுடைய படிப்பைப் பரிசோதித்தார்கள். பிறகு ஞானாம்பாள் என் தாயாரைப் பார்த்து "அத்தை யம்மா உங்களுக்கு அநேக சரித்திரங்கள் தெரியுமே! யாதொரு பதிவிரதையி னுடைய சரித்திரம்