பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் இராசராச சோழன் 107 ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்தை உணர்த்துவனபோல் காணப்படினும் அவை உண்மையில் முரண்படக் கூறவில்லை. இராசராசன் தன் திக்கு விசயத்தைத் தொடங்குவதற்கு முன், தன் தூதனைச் சேரன் அவமதித்துச் சிறையிலிட்டமை பற்றிச் சேர நாட்டிற்குப் படையெடுத்துச் செல்வது இன்றியமையாத தாயிற்று. ஆகவே, சேர நாட்டில் காந்தளூர்ச் சாலையில் கி. பி. 988-ல் நிகழ்ந்ததே இராசராச சோழனது முதற் போர்என்று கல்வெட்டுக்கள் உணர்த்தும் செய்தி உண்மையானதேயாம். திருவாலங் காட்டுச் செப்பேடுகளை நுண்ணிதின் ஆராயுங் கால் அவை கூறுஞ் செய்தியிலும் தவறில்லை என்பது நன்கு புலனாகும். இராசராச சோழன் திக்குவிசயஞ் செய்யத் தொடங்கிய போது முதலில் தாக்கி வென்றது தென்றிசையி லுள்ள பாண்டி நாடே என்பதுதான் திருவாலங்காட்டுச் செப்பேடுகளால் அறியக்கிடப்பது. எனவே, இராசராசனது திக்குவிசயச் சிறப்பைக் கூறத் தொடங்கிய திருவாலங் காட்டுச் செப்பேடுகள் அதற்கு முன்னர் இவன் ஆட்சியில் நிகழ்ந்த போர்ச் செயலைக் குறிப்பிடாமையால் முதலில் நடை பெற்ற காந்தளூர்ச்சாலைப் போர் அவற்றில் காணப்படவில்லை என்க . I இனி, இராசராச சோழன் தன் திக்குவிசயத்தில் பாண்டி நாட்டைக் கைப்பற்றிப் பிறகு கொல்லத்திற்குச் சென்று அங்குப் போர் புரிந்து அதனைக் கைக் கொள்வானாயினன். கொல்லம் என்பது இந்நாளில் திருவாங்கூர் இராச்சியத் திற்குள் அமைந்துள்ள சிறு நாடாகும். அது, முன்னர் இவ் வேந்தன் கைப்பற்றிய சேர நாட்டில் சேரன் ஆட்சியில் எஞ்சி யிருந்த பகுதியாகும். அதனையும் அதனைச் சார்ந்த கொடுங் கோளூரையும் இவன் வென்று தன்னடிப்படுத்திய காரணம் பற்றி இவனுக்குக் கீர்த்தி பராக்கிரமன் என்னும் சிறப்புப் பெயர் வழங்கியமை அறியற் பாலதாம்.1 அஃது இவன் இரண்டாம் முறை சேரனுடன் நடத்திய போராகும். 1. Annual Report on South Indian Epigraphy for the year 1911-12, Para 22.