பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் இராசேந்திர சோழன் 153 ஈண்டுக் குறிப்பிடத்தக்க தொன்றாம். முதற் பராந்தக சோழன் தன் ஆட்சிக்காலத்தில் ஈழ நாட்டின் மேல் படை யெடுத்துச் சென்றமைக்குக் காரணம் மூன்றாம் இராச சிம்ம பாண்டியன் அங்கு வைத்துச்சென்ற ' சுந்தர முடியும் இந்திரன் ஆரமும்' கைப்பற்றுவதற்கேயாம். ஆனால், அவன் விரும்பியவாறு அக்காலத்தில் அவற்றைக் கைப்பற்றிக் கொண்டுவர முடியவில்லை. எனினும், அவன் விருப்பம் சுமார் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு அவன் பேரனுக்குப் பேரனாகிய நம் இராசேந்திர சோழன் ஆட்சிக்காலத்தில் நிறைவேறியது அறியற்பாலதாம். இனி, ஐந்தாம் மகிந்தனது ஆட்சியின் 36-ம் ஆண்டில் இராசேந்திர சோழனுடைய படைஞர்கள் ஈழநாட்டில் பல இடங்களில் கொள்ளையிட்டு, மணியும், பொன்னும், அணி கலன்களும், பல பொற்படிமங்களும் கவர்ந்து கொண்டனர் என்றும், போரில் புறங்காட்டி ஓடியொளிந்த அச்சிங்கள வேந்தை உடன்படிக்கை செய்துகொள்வதற்கு அழைப்பது போல் வருவித்துச் சிறைப்பிடித்து அப்பொருள்களோடு சோழ நாட்டிற்கு அனுப்பிவிட்டனர் என்றும் மகாவம்சம் கூறுகின்றது. அன்றியும், சிங்கள வேந்தனாகிய ஐந்தாம் மகிந்தன் என்பான், சோழ நாட்டில் பன்னிரண்டு ஆண்டுகள் வரையில் உயிர் வாழ்ந்திருந்து கி. பி. 1029-ஆம் ஆண்டில் இறந்தனன் என்பது மகாவம்சத்தால் அறியக்கிடக்கின்றது. அச்செய்திகள் எல்லாம் இராசேந்திர சோழன் கல்வெட்டுக் களில் காணப்படவில்லை. எனினும் தஞ்சாவூர் ஜில்லாவில் கோனேரிராசபுரத்திலுள்ள கல்வெட்டொன்று 1, மகிந்தன் சோழ நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் இராசேந்திர சோழனுக்கு முற்றிலும் பணிந்துவிட்டான் என்று கூறு கின்றது. ஆகவே, அப்படையெழுச்சியின் பயனாக ஈழ நாடு முழுவதும் இவன் ஆட்சிக்கு உட்பட்டுவிட்டது என்று கூறலாம். ஈழ நாட்டில் காணப்படும் இவன் காலத்துக் 1. Ins. 642 of 1909; The Colas, Vol. I, p. 240.