பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 பிற்காலச் சோழர் சரித்திரம் மைசூர் சில்லாவிலுள்ள சங்க நாட்டை ஆண்டுவந்த சங்காள்வார் மரபினரும், இராசேந்திரசோழனுக்குக் கப்பம் செலுத்திக்கொண்டிருந்தனர். சிலகாலத்திற்குப் பின்னர், கொங்காள்வார் தம்மைச் சோழர் வழியினர் என்று கூறிக்கொண்டமையோடு, தம்மைக் கரிகாலசோழன் மரபினர் என்று சிறப்பித்துச் சொல்லிக் கொண்ட தெலுங்கச் சோழரைப்போல் பெருமையும் எய்துவாராயினர். இனி, சோழர்களின் ஆற்றல், வீரம் ஆகியவற்றை அயல் நாட்டார் எல்லோரும் அறிந்து அடங்கியொழுகுமாறு செய்தவர்கள், பெரு வீரர்களாகிய இராசேந்திரன் புதல்வர் களும் பேராற்றல் படைத்த அரசியல் அதிகாரிகளுமே யாவர். அவர்கள் அலைகடல் நடுவுள் பலகலஞ் செலுத்திக் கடல் கடந்த நாடுகளையும் கைப்பற்றினரெனின் அன்னோரது கடற்படை எத்துணை வலிமையுடையதா யிருந்திருத்தல் வேண்டும்? இராசேந்திரனது ஆட்சியின் இறுதிக் காலத்தில் சோழ இராச்சியம் யாண்டும் பரவிச் சிறப்புற்றிருந்தது. சென்னை மாகாணம், மைசூர் இராச்சியம், ஒரிசா மாகாணத் தின் தென்பகுதி, நைசாம் இராச்சியத்தின் பெரும் பகுதி, இலங்கை, மலேயா, சுமத்ரா ஆகிய நாடுகள் நம் இராசேந்திர சோழன் ஆட்சிக்கு உட்பட்டிருந்தன. அந் நாடுகளில் இவ்வேந்தனது ஆட்சி இனிது நடைபெறுமாறு 'உதவியவர்கள் இவனுடைய புதல்வர்களும், அரசியல் அதிகாரிகளுமே என்பது சிறிதும் புனைந்துரையன்று. சில சமயங்களில் சேய்மையிலிருந்த நாடுகளில் தோன்றிய சிறு கலகங்களும் அவ்வரசியல் தலைவர்களால் அவ்வப் போது அடக்கப்பெற்றமையின் இவ்வேந்தன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாடுகளில் மக்கள் அமைதியுடன் வாழ்ந்து வந்தனரெனலாம். ஆகவே இராசேந்திரன் ஆட்சிக் காலத்தில் சோழ இராச்சியம் என்றுங் காணமுடியாத மிக உயர்ந்த நிலையில் திகழ்ந்தது என்பது ஒருதலை.