பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 பிற்காலச் சோழர் சரித்திரம் இராசாதிராசன்பால் ஒரு செய்தி தெரிவிக்குமாறு அனுப்பியபோது அவ்விருவருள் ஒருவனுக்கு ஐங்குடுமி - வைப்பித்து ஆகவமல்லன் என்று பெயரிட்டும் மற்றவனுக்குப் பெண்ணுடை தரிப்பித்து ஆகவமல்லி என்று பெயரிட்டும் இவன் திருப்பியனுப்பினன் என்பதேயாம். அந்நிகழ்ச்சி, மேலைச்சளுக்கியரோடு இராசாதிராசன் மூன்றாம் முறை நடத்திய போரில் நிகழ்ந்த செயல்களுள் ஒன்றாதல் வேண்டும். அவர்களோடு இவ்வேந்தன் இம்முறை நிகழ்த்திய போரில் வெற்றி எய்திய பின்னர், அன்னோரது தலை நகராகிய கல்யாணபுரத்தைக் கைப்பற்றி அங்கிருந்த அரண்மனையையும் இடித்து, தன் வெற்றிக்கு அடையாளமாக அந்நகரிலேயே வீராபிடேகஞ் செய்துகொண்டு விசயராசேந்திரன் என்னும் பட்டமும் புனைந்தனன். இச்செய்திகள் இராசாதிராசன் கல்வெட்டுக்களில் மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டிருக் கின்றன. அன்றியும், இவனது பிற்காலக் கல்வெட்டு ஒன்றினாலும் இவை உறுதி எய்துகின்றன.. கும்பகோணத் திற்கு அண்மையிலுள்ள தாராசுரம் இராசராசேச்சுர முடையார் கோயிலில் வைக்கப்பெற்றுள்ள துவாரபாலர் படிமம் ஒன்றின் பீடத்தில் ' ஸ்வஸ்திஸ்ரீ உடையார் ஸ்ரீ விஜயராசேந்திர தேவர் கல்யாணபுரம் எறிந்து கொடுவந்த துவாரபாலர் ' என்று வரையப்பெற்றுள்ள செய்தி இப்போர் நிகழ்ச்சிக்குச் சிறந்த சான்றாக இருத்தல் அறியத்தக்கது. எனவே, இராசாதிராசன், மேலைச்சளுக்கியரது தலை நகராகிய கல்யாணபுரத்தைக் கைப்பற்றி அங்கிருந்து கொணர்ந்த பொருள்களுள் அத் துவாரபாலரது படிமமும் ஒன்று என்பது தேற்றம். அதன் சிற்பவமைதி, சோழர்காலத்துத் தமிழ் நாட்டுப் படிமங்களோடு ஒத்தில்லாமல் வேறுபட் டி.ருத்தலால் அது மேலைச்சளுக்கிய நாட்டுப் படிமமேயாதல் வேண்டும். ஆகவே, இராசாதிராசன் மேலைச்சளுக்கியரோடு 1. S. I. I. Vol. V, No. 465; Ep. Car., Vol. X. KI., 112 (b) 2. Ins. 224 of 1925; Ins. 245 of 1929.