பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

பிற்காலச் சோழர் சரித்திரம்

பற்றிக்கொண்டான் என்பது நன்கு புலனாகின்றது. எனவே, அந்நாளில் சோழ மண்டலத்தில் ஒரு பகுதி விசயாலய சோழன் ஆட்சிக்கும் மற்றொரு பகுதி பல்ல வன் நிருபதுங்க வர்மன் ஆட்சிக்கும் உட்பட்டிருந்தன வாதல்வேண்டும்.

இஃது இங்ஙனமாக, பாண்டி நாட்டில் மாறவர்மன் பரசக்கர கோலாகலன் கி. பி. 862-ஆம் ஆண்டில் இறக்கவே, அவன்மகன் இரண்டாம் வரகுண வர்மன் அரசுகட்டில் ஏறினான். அவனுக்குத் தன் தந்தை இழந்த சோணாட்டுப் பகுதியைத் தான் திரும்பக் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. அவன் தன் கருத்தை நிறைவேற்றுவதற்குக் காலங் கருதிக்கொண் டிருந்தமையோடு தன் படை வலியைப் பெருக்கிக்கொண் டும் வந்தான். அக்காலத்தில் சோழ மண்டலத்துள் ஒரு பகுதியை ஆட்சி புரிந்துகொண்டிருந்த விசயாலய சோழன் முதுமை எய்தி வலிகுன்றி யிருந்தான். அம் மண்டலத்தின் மற்றொரு பகுதியையும் தொண்டை நாட் டையும் ஒருங்கே அரசாண்டுகொண்டிருந்த பல்லவ வேந்தனாகிய நிருபதுங்க வர்மனும் இறக்கவே, அவன் புதல்வன் அபராஜித வர்மன் முடிசூடி ஆட்சியைக் கைக் கொண்டான். இரண்டாம் வரகுண பாண்டியன், தன் கருத்தை நிறைவேற்றுவதற்கு அதுவே தக்க காலம் என்று கருதி, கி. பி. 880-ஆம் ஆண்டில் பெரும்படை யைத் திரட்டிக்கொண்டு சோணாட்டிற் புகுந்தான். அந் நாட்டில் காவிரியாற்றிற்கு வடக்கேயுள்ள மண்ணி நாட்டு நகரங்களுள் ஒன்றாகிய இடவை2 வரகுண பாண்டியனால்


1. பாண்டியர் வரலாறு-பக். 34.

2. இடவை என்ற ஊர் தற்காலத்தில் அப்பகுதியில் காணப் படவில்லை. எனவே, அது வேறு பெயரோடு இந்நாளில் வழங்கப்படுகிறதுபோலும். கும்பகோணத்திற்கு வடகிழக்கேயுள்ள திருவியலூர், வேப்பத்தூர், திரைலோக்கி, திருக்குடித்திட்டை, இடையார் நல்லூர், திருப்பனந்தாள் முதலான ஊர்கள் மண்ணி நாட்டில் உள்ளவை என்பது கல்வெட்டுக்களால் புலப்படுகிறது.