பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

பிற்காலச் சோழர் சரித்திரம்

வென்றடக்குவது இன்றியமையாததாயிற்று. அம்முயற்சியில் தான் கங்க மன்னனாகிய இரண்டாம் பிருதிவிபதி என்பான், பராந்தகனுக்கு உதவிபுரியவந்து வல்லத்தில் நிகழ்ந்த போரில் வாணர்களை வென்று அதற்குப் பரிசிலாக வாணகப்பாடி நாட்டையும் செம்பியன் மாவலி வாணராயன் என்ற பட்டத்தையும் இவ்வேந்தன்பால் பெற்றிருத்தல் வேண்டும் என்பது நன்கு வெளியாகின்றது.

பராந்தகன்பால் தோல்வியுற்றுத் தம் நாட்டை இழந்த வாணர்குல வேந்தர் இரண்டாம் விசயாதித்தனும் அவன் மகன் இரண்டாம் விக்கிரமாதித்தனும் ஆவர்.[1] பராந்தகன் கி. பி. 910-ஆம் ஆண்டில் இராசசிம்ம பாண்டிய னோடு நடத்திய முதற்போருக்குப் பின்னர் வாணரை வென்றிருத்தல் வேண்டும். இவனது ஆட்சியின் ஆறாம் ஆண்டில், தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள புள்ளமங்கைக் கோயிலில் சிறுகாலைச்சந்தி நடத்துவதற்கு நிவந்தமாக மாவலிவாணராயன் நிலம் வாங்கிக் கொடுத்தானென்று அவ்வூர்க் கல்வெட்டொன்று [2] கூறுகின்றது. இரண்டாம் பிருதிவிபதி அவ்வாண்டிலேயே செம்பியன் மாவலிவாணராயன் என்ற பட்டத்துடன் விளங்கினான் என்பது அக் கல்வெட்டால் புலனாகின்றது. எனவே, அக் கங்க மன்னன் அப்பட்டம் பெறுவதற்கு ஏதுவாயிருந்த வல்லத்துப் போர், கி. பி. 913-ஆம் ஆண்டிற்கு முன்னர் நடைபெற்றதாதல் வேண்டும். ஆகவே, பராந்தகன் வாணரை


  1. பராந்தகன்பால் தோல்வியுற்ற வாணர்குல மன்னர், இரண்டாம் விக்கிரமாதித்தனும் அவன் மகன் மூன்றாம் விசயாதித்தனும் ஆவர் என்பர் பேராசிரியர் திரு. K. A. நீலகண்ட சாஸ்திரியார். (The Colas, Vol. (Page 151) இரண்டாம் விசயாதித்தன் கல்வெட்டுக்கள் கி. பி. 909-10 ஆம் ஆண்டுகளிலும் காணப்படுதலால் வல்லத்துப் போரில் அவன் கலந்துகொண்டு போர்புரிந்து உயிர்துறந்திருத்தல் வேண்டும் என்று காலஞ்சென்ற திரு. A. S. இராமநாத ஐயர் கூறியுள்ளனர்.
  2. Ep. Ind., Vol. XXVI, p. 114. Ep. Ind., Vol. XXVI, No. 10.