பக்கம்:பிள்ளையார் சிரித்தார்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

47

பானையில் கையை விட்டு, இரு கடைவாயும் வழிய வெண்ணெயை வாரி வாரி உண்டான். அந்த இன்பத்தில் திளைத்திருக்கையில் ஆயர் குல மங்கையர் கண்ணனைப் பிடித்துவிட்டனர்.

"வா, இப்பொழுது உன்னை இப்படியே யசோதை அம்மாவிடம் அழைத்துப் போய் என்ன செய்கிறோம், பார்! எத்தனை தரம் இப்படி நீ ஒவ்வொரு மாதிரி விஷமம் செய்து எங்களுக்குத் திரும்பத் திரும்பத் தொல்லை தந்திருக்கிறாய்? இவற்றையெல்லாம் நாங்கள் விற்றுக் காசாக்கி, வயிறு பிழைக்க வேண்டியவர்கள் அல்லவா?"

"வீட்டிற்கு வந்து ஒழுங்காகக் கேட்டால் ஒரு பந்து வெண்ணெய் கொடுத்துத் தொலைத்திருக்க மாட்டோமா? இப்போது எல்லாம் போயிற்றே!"

இப்படி ஆளுக்கொரு பக்கம் கேள்விகளை மாறி மாறிக் கேட்டுத் துளைத்தனர்.

உடனே, கண்ணன் அவர்களைச் சிறிதும் லட்சியம் செய்யாமல் பளிச்சென்று கூறினான்.

"கண்டிப்பாக மாட்டீர்கள். நீங்கள் இப்படித் தொலைப்பீர்களே தவிர, மனசாரக் கொடுத்துத் தொலைக்க மாட்டீர்கள்."

"ஆ..கா, அப்படியா? அதற்காக இப்படித்தான் எங்கள் பானையை உடைத்துத் தொழிலைப் பாழ் செய்வதா? வா உன் அம்மாவிடம், இந்த வாயைப் பார்த்த பிறகாவது உன் அம்மாவின் வாய் மூடட்டும்" என்று கண்ணனை எல்லோருமாகச் சேர்த்துக் கட்டிப் பிடித்துக் கரகரவென்று இழுத்தனர்.

வேறு வழியின்றி வசமாக மாட்டிக்கொண்ட கண்ணன், சட்டென்று தன்னுடைய பாணியை மாற்றிக் கொள்கிறான்.