பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்று இலக்கிய வாதிகளால் அழைக்கப்படுபவர். ஆழ்ந்தகன்ற பெரும்புலமையும், மரபிலக்கியப் பயிற்சியும் மிக்கவர். இவர் படைப்பான ‘பாழ் நிலம்’ (Waste Land) ஒப்பற்ற குறியீட்டுக் காப்பியமாகவும், அங்கதமாகவும் கருதப்பட்டு, உலகின் உயர்ந்த பரிசான நோபெல் பரிசையும் பெற்றது, முதல் உலகப் போருக்குப் பின் ஐரோப்பாவில் ஏற்பட்ட நன்மீக வறட்சியையும், அதன் விளைவாக மக்கட் சமுதாயத்தில் ஏற்பட்ட சீர்குலைவையும் ‘பாழ்நிலம்’ விவரிக்கிறது.

டி. எஸ். எலியட்டின் சமகாலத்தவரும் நண்பருமான எஸ்ரா லூமிஸ் பவுண்ட் சிறந்த கவிஞர்; பன்மொழி வல்லுநர்; பல்கலை அறிஞர்; சீர்திருத்தவாதி. ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளின் சிறப்பை உலகறியச்செய்தவர். பெருங்கவிஞர் யேட்ஸ், எலியட் போன்றோரின் கவிதைகளில் தமது கத்தரிக் கோலை நீட்டிச் செம்மைப்படுத்தியவர். யாரும் நெருங்குவதற்கு அஞ்சிய, பிடிவாதமான முரட்டு இலக்கியமேதை. கவிதைத்துறையில் ‘படிம இயக்கத்தைத்’ தோற்றுவித்தவர். ஃபாசிஸத்தை ஆதரித்துப் பிரசாரம் செய்தவர்; முசோலினியின் நண்பர். கண்டபடி மனம்போன போக்கில் எழுதப்பட்ட புதுக்கவிதை இவரால் செறிவும், இறுக்கமும், செம்மையும் நுட்பமும், வேலைப்பாடும் மிக்கதாக மாறியது.

ஸ்பானிஷ் மொழிக்கவிஞர்களான லார்காவும், பாப்லோ நெருடாவும் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களுடைய படைப்புக்கள் பிரெஞ்சு, ஆங்கிலக் கவிஞர்களின் படைப்பினின்றும் வேறுபட்டவை. முதல் உலகப்போர் முடிந்தபிறகு ஐரோப்பிய நாடுகளிலிருந்து கிளம்பிய முன்னோக்கியம், டாடாயியம் என்ற புரட்சி அலைகள் ரெஸிடென்சியாவில் இருந்த ஸ்பானிய இலக்கிய வாதிகளிடத்திலும் பாதிப்புகளை உண்டாக்கின. ஆனால் லார்கா எந்த இலக்கியக் கட்சியிலும் ஈடுபாடு காட்டவில்லை. மரபிலும், புதுமையிலும் காணப்பட்ட நல்ல அம்சங்கள் யாவும், அவனையும் அறியாமல் லார்காவின் படைப்புக்களில் இடம்பெற்றன. லார்கா புதுக்கவிஞனாகவும், அதேசமயத்தில் மரபோடு கூடிய கிராமியப்பாடல் பாடும் கவிஞனாகவும் (Folk Poet) விளங்கியது வியப்பிற்குரியது.

பாப்லோ நெருடா சிலிநாட்டுக் கவிஞன். ப்ரெக்டைப்போல் அரசியல்வாதி; மாயகோவ்ஸ்கியைப்போல் பொதுவுடைமைக் கட்சியின் தீவிர உறுப்பினனாக இருந்ததோடு, அவனைப் போல பாட்டாளிகளின் கூட்டங்களில் படிக்கும் பேச்சுக் கவிதைகளை (spoken poetry) எழுதியவன்; கிழக்கு நாடுகளிலும், ஐரோப்பாவிலும் சிலிநாட்டின் அரசியல் தூதராக நீண்ட காலம் பணியாற்றியவன்; சிலிநாட்டு அரசியலில் முக்கிய பங்கு வகித்தவன். அரசியல் வெளிப்பாட்டியமும், நடப்பியமும் இவன் கவிதைக் கொள்கைகள். தாந்தேயையும் மில்டனையும் எப்படித் தெய்வீகக் கோட்பாட்டினின்றும் பிரித்துப் பார்க்கமுடியாதோ, ஹ்யூகோவையும், விட்மனையும் எப்படி மக்களாட்சிக் கோட்பாட்டினின்றும் பிரித்துப் பார்க்க முடியாதோ, அது