பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புகழ்பெற்ற புதுக் கவிஞர்கள்42

கூர்த்த விழிகளோடும், மெல்லிய நீளமான அழகிய விரல்களோடும் ரில்க் படத்தில் காட்சியளிக்கிறார். அவர் சிரிப்பை விரும்பாதவர்; ஜெர்மானியக் கண்டிப்போடு கூடிய மெய்விளக்க வாதி; படித்த இளைஞர்களோடும் பண்பட்ட இளங் கலைஞர்களோடும் நீண்டநாள் கலந்துரையாடிக் கவிஞனின் குறிக்கோள்களைக் கற்றுணர்ந்தவர்.

ஷெல்லி பிரெஞ்சுப் புரட்சி பெற்றெடுத்த குழந்தை; ரில்க், தன்னைத்தானே அழித்துக் கொள்ளப்புறப்பட்ட ஐரோப்பியப் போர் வெறியின் எதிர்ப்புணர்ச்சி பெற்றெடுத்த குழந்தை.

சிற்பியிலிருந்து சீமாட்டிவரை ரில்க்கின் வாழ்க்கையில் பல பெண்கள் குறிக்கிட்டனர். அவர்களிடம் ரில்க் கொண்ட காதலுறவும் சுவையானது; புதிரானது. ரில்க்கின் முதற் காதல் 1897-இல் வேலரி டேவிட் ரோன்ஃபீல்ட் என்ற பெண்ணிடம் துவக்கவிழாக் கொண்டது. அவரது முதல் கவிதை நூலுக்கு அவள் ஊக்கச் சக்தியாக விளங்கியதோடு அந்த நூலை வெளியிடும் பொருட்செலவையும் அவளே ஏற்றாள். ‘வல்லி’ என்று தன் குறிப்புகளில் வாஞ்சையுடன் குறிப்பிடுகிறார் ரில்க். ஆனால் அவள் உறவு குறுகிய காலத்தில் முறிந்தது.

அடுத்து ரில்க்கைக் கவர்ந்தவள் ‘லோ சலோமி’. அவள் அதிர்ச்சிதரும் அழகுத் தேவதை. இருபது வயதில் ஜெர்மானியத் தத்துவஞானி நீட்சேயைத் தன் அழகின் முன் மண்டியிடச் செய்தவள். ரில்க்கைச் சந்தித்த போது அவளுக்கு வயது முப்பத்தைந்து; திருமணமானவள். ரில்க் அப்போது இருபத்து மூன்று வயதுக் கட்டிளங்காளை. என்றாலும் தனது அனுபவக்கரங்களாலும் அமுத மொழிகளாலும் ரில்க்கை அரவணைத்துத் தாலாட்டினாள். கண்டதும் காதல்! விரைவில் அவர்கள் பிரிந்தாலும், காதல் தொடர்பு அற்றுப் போகவில்லை; வாழ்க்கையின் இறுதிவரை நீடித்தது. லோ சலோமி ரில்க்கின் உள்ளத்துக்கு நெருக்கமானவளாகவும் உணர்ச்சிப் பரிமாற்றங்களுக்கு ஏற்றவளாகவும், ஆதர்ச நங்கையாகவும் எப்போதும் விளங்கினாள்.

அவர் நெருங்கிப் பழகிய பெண்களுள் டிரிஸ்டி நகருக்கருகில் இருந்த டியூனோ கோட்டை இளவரசி ‘மேரிவான்தான்’ குறிப்பிடத்தக்கவள். அவளுடைய அன்புக்கும் அரவணைப்புக்கும் கட்டுப்பட்டு ஆண்டுக் கணக்காக அவளுடைய கோட்டையில் தங்கியிருந்தார் ரில்க். புகழ்பெற்ற ‘டியூனோ இரங்கற்பா’ (Duing Elegies) தோன்றக் காரணமாக இருந்த நங்கையும் இவளே

ருசியப் பயணம் முடிந்து ஜெர்மன் திரும்பியதும். சில்க் ‘வொர்ப்ஸ்வீட்’ என்ற சிற்றூருக்குச் சென்றார். அங்கே ‘கிளேரா வெஸ்ட்ஹாஃப்’ என்ற இளஞ் சிற்பியைச்சந்தித்தார்.