பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புகழ்பெற்ற புதுக் கவிஞர்கள்46

கள் கருதுகின்றனர். வேறு யாப்பு முறையைப் பயன்படுத்தியிருந்தால், ரில்க்கிற்குத் தேவைப்பட்ட நிகழ்ச்சி கிடைக்காமல் போயிருக்கும். ரில்க் இவற்றுள் பயன்படுத்தியிருக்கும் மூவசைச் சீர்கள், கட்டற்ற கவிதை யாப்பில் வழக்கமாகக் காணப்படும் சந்தத் தடைகளைப் போக்கிவிட்டன.

டியூனோ இரங்கற்பாக்களின் தனிப்பாவையோ, அதன் பகுதியையோ தம்மைத் தவிர வேறு யாரும் பதிப்பிக்கக் கூடாது என்று ரில்க் அறிவித்திருந்தார். இரங்கற்பா முழுவதையும் வேறு ஒருவர் பதிப்பிக்கவும் முடியாது. பதிப்பிக்கக் கூடிய கவிதை அமைப்பிலும் அவை இல்லை.

ஆர்ஃபிசை நோக்கி எழுதப்பட்ட ஈரேழ்வரிப் பாக்கள் மொத்தம் ஐம்பத்தைந்து. இவை அற்புதங்கள் நிகழ்த்திய கிரேக்கப்பாடகனாக ஆர்ஃபிசின் ஆற்றலோடு எழுதப்பட்டவை. ஆர்ஃபிசின் வாழ்க்கையில் கேட்போரை மயங்க வைக்கும் அற்புதங்கள் இருப்பது போல, இந்தப் பாக்களிலும் படிப்போரை மயங்க வைக்கும் மறை பொருள்கள் நிறைய உண்டு.

"இப்பாக்கள் இறுக்கமும் சுருக்கமும் மிக்கவை; இவற்றை ‘அறிந்து கொள்ளுதல்’ என்பதைவிட ‘உள்ளுணர்வால் உணர்ந்து கொள்ளுதலே’ படிப்போரால் இயலும்” என்று ரில்க்கே ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளார். இக்குறிப்பு ரெம்போவின் கவிதைகளுக்கும், அவற்றையொட்டிப் பின்னால் தோன்றிய கவிதைகளுக்கும் பொருந்தும் என்றாலும், இப்பாக்களில் கையாளப்பட்டுள்ள உத்திகள் ரில்க் கைப்பற்றி அறிந்து கொள்ளப் பெரிதும் உதவுகின்றன.

கிரேக்க இலக்கியங்கள் மீதும் கலைகளின் மீதும் ரில்க்கிற்கு நிறைய ஈடுபாடு உண்டு. கிரேக்கப் பாடகனான ஆர்ஃபிசின் இசையாற்றல், அவன் மனைவி யூரிடிஸின் இறப்பு, அவளை மீட்க அவன் இறப்புலகம் சென்று மீளுதல், கடைசியில் அம் முயற்சியில் ஏற்பட்ட அவலம் யாவும் மிகவும் உணர்ச்சிகரமாகக் கற்பனைநயத்தோடு இப்பாக்களில் பேசப்படுகின்றன. இவை கிரேக்கத் தெய்வத்தை நோக்கிப் பாடப்பட்டதாக அமைந்திருந்தாலும், உண்மையாக மக்களை நோக்கிப் பாடப்பட்டவை. வாழ்க்கையில் ஏற்படும் இழப்புக்களை எப்படித் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதையும், அவற்றை எப்படி மகிழ்ச்சியாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதையும் மறை பொருளாகப் பாடுகிறார் ரில்க்.

ரில்க் இசையை மிகவும் விரும்பினார். ஆர்ஃபிசின் யாழும். அவன் இசையும் ரில்க்கின் நெஞ்சில் நீங்காத இடத்தைப் பெற்றுவிட்டன. ‘இசையே உலகம்; இசையே வாழ்க்கை. உலகின் எல்லாக் கலைகளும் இசையின் மாற்று வடிவங்களே’ என்பது ரில்க்கின் கருத்து. இசையைப் பற்றித் தம் கவிதையில் ஓரிடத்தில் குறிப்பிடும்போது,