பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புகழ்பெற்ற புதுக் கவிஞர்கள்058

கலவையாக அமைந்திருந்தன; மேலும் ப்ரவென்கல் கவிஞர்கள், இடைக்காலத் தன்னுணர்ச்சிக் கவிஞர்கள், பிரெளனிங், வில்லியம் மோரிஸ், ஸ்வின்பர்ன், லயனல் ஜான்சன் போன்றோரின் படைப்பின் சாயலையும் அவற்றில் காணலாம். பழமையும் செழிப்பும் மிக்க நாட்டுப் பாடல்களும், பிரெஞ்சு மடக்குப் பாடல்களும் இவருடைய கன்னிப் படைப்புக்குக் கடைக் காலாக அமைந்தன. பவுண்ட் தமது 29 ஆம் வயதில் ‘டோரதி ஷேக்ஸ்பியர்’ என்ற பெண்ணை மணந்தார். அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தையும் பிறந்தது.

பாரிசு நகர நண்பர்களையும், இளைஞர்களையும், இலக்கியவாதிகளையும் பவுண்ட் தன் பேச்சாலும், கருத்தாலும், அசாத்தியப் புலமையாலும், படைப்பு வேகத்தாலும், வக்கர புத்தியினாலும், முரட்டுத்தனத்தாலும் எரிச்சலூட்டிக் கொண்டும் திகைக்க வைத்துக் கொண்டுமிருந்தார். நாளாக ஆக அவர் கண்டிப்புமிக்க முரட்டு ஆசிரியராக மாறித் தம் அறிவுரைகளை எல்லாருக்கும் வழங்கிக் கொண்டிருந்தார். அதேசமயத்தில் புதுவிதமான படைப்பாற்றல் ஒன்று அவரிடம் கால்கொள்ளத் தொடங்கியது. குத்தலும் கிண்டலும் கூடிய உரையாடல் பாணியில் அவர் கவிதை எழுதத் தொடங்கினர் மொழிபெயர்ப்புகள் தனித்தனிச் சிறிய கவிதைத் தொடர்ச்சிகள் என்ற நிலையிலிருந்துமாறிச் சிக்கலான வடிவமைப்பையுடைய நீண்ட கவிதை முறைக்கு மாறினார். 35ஆவது வயதில் அவர் எழுதி வெளியிட்ட ஹக்கில்வின் மாபெர்லி (Hug Selwyn Mauberly) என்ற கவிதைத் தொடர் அவர் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைநதது.

‘மாபெர்லி’ பன்னிரண்டு கவிதைகள் அடங்கிய தொடர். இக் கவிதைத் தலைவன் மாபெர்லி விளம்பரமில்லாத ஒரு கற்பனைக் கவிஞன்; தனக்கு முற்பட்ட கலை இலக்கியச் சாதனைகளை நன்கறிந்த அழகியல்வாதி. ஆனால் தன்னைச் சுற்றியுள்ள கலை இலக்கிய வாதிகளின் போலித்தனங்களோடும், சமுதாயத்தின் கொச்சைத் தன்மையோடும் அவனால் ஒத்துப்போக முடியவில்லை. தனக்கென்று படைத்துக் கொண்ட தற்காப்பான நுண்ணிய தனிமை உலகில் அவன் தன்னைச் சுருக்கிக் கொள்கிறான். ப்ருஃப் ராக்கின் பாத்திரப் படைப்பு டி. எஸ். எலியட்டுக்கு எப்படி ஒரு முக மூடியாக அமைந்ததோ அதேபோல மாபெர்லி பாத்திரம் பவுண்டின் முக மூடியாக அமைந்துள்ளது. மாபெர்லி பாத்திரத்தின் வாயிலாகத் தன் சொந்தக் கருத்துக்களையும், கொள்கைகளையும், விருப்பு வெறுப்புக்களையும் குத்தலும் கேலியும் கலந்து கொட்டித்தீர்க்கிறார். தமக்கு அந்நியமாகிப் போன ஆங்கிலக் கலாச்சாரத்தின் கோணல்களையும், வியாபாரத் தன்மை மலிந்து போன போலிக் கலை இலக்கிய உலகையும் கடுமையாகச் சாடுகிறார். மாபெர்லி வாழ்ந்த இங்கிலாந்தின் கவிதை இலக்கியச் சூழல் பற்றிக் குறிப்பிட்ட பவுண்ட்,