உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புகழ்மாலை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

புகழ் மாலை


பழங்காலச் சுவடி தேடும்
           பணியிலே ஈடு பட்டு
விழுங்காலம் வரும்வ ரைக்கும்
           வேதியர் தொண்டு செய்தார்.
செழுங்காந்தள் மலரைப் போன்று
            சிவந்தவர் செய்த தொண்டோ
ஒழுங்கான தொண்டு; கல்வி
            உலகமே போற்றும் தொண்டு.

நாமெலாம் பத்துப் பாட்டை
            நன்னூலைப் பார்க்கின் றோமே
ஒமநா தைய ரோஅவ்
            ஓலையை அச்சி லிட்டார்?
பூமிபோற் பொறுமை கொண்ட
            புலவராம் இவரே இட்டார்.
சாமிநா தைய ரின்றேல்
            சங்கநூல் மறைந் திருக்கும் !

ஆயிரம் பிறைகள் கண்டார்
            ஆணிப்பொன் ஐயர். பெற்ற
தாயினும் சிறந்த தான
            தமிழுக்கே தம்மை ஈந்தார்.
தூயநூற் சுவடி தந்த
             தூயவர், பாடல் பெற்ற
கோயில்போ லானார், தஞ்சைக்
            கோபுரக் கலச மானார் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/10&oldid=1871697" இலிருந்து மீள்விக்கப்பட்டது