18
புகழ் மாலை
பொய்யராய்ச் சமுதா யத்தின்
புரட்டராய் வாழ்வா ரெல்லாம்
“ஐயரா ?” என்று கேட்டார்
ஆவிபோம் வரையில் அன்னார்
மெய்யராய் வாழ்ந்தார். வாழ்வில்
வீணராய்க் கேட்டு வாங்கும்
கையராய் வாழ்ந்தார்க் கெல்லாம்
காலனாய்க் காட்சி தந்தார் !
எட்டைய புரத்தார் பாடல்
இனிப்பிலே பழுத்த பாடல்
பட்டினப் பாலை என்னும்
பாடல்போற் சிறந்த பாடல்
மெட்டோடு பரவும் பாடல்
மேனாடும் போற்றும் பாடல்.
ஒட்டிய இளமை போலே
உணர்ச்சியைத் தூண்டும் பாடல் !
பாரதி நம்நூற் றாண்டின்
பட்டினிப் புலவர். வீர
பாரதி நீண்ட காலம்
பாரினில் வாழ்ந்தா ரில்லை.
பாரதி தோற்றா ரில்லை,
பாடலால் பிழைத்தா ரில்லை.
பாரதி முற்றுப் பெற்றார்
பாடலால் ‘உலகம்’ பெற்றார் !