28
புகழ் மாலை
அள்ளும் அழகுடையோன் – அவன்
அங்கம் அழிந்திடினும்
தெள்ளு தமிழ்க்குதவும் – அவன்
சிந்துகள் வாழ்ந்திருக்கும் !
கொள்ளி அணைவதுண்டு – நிறம்
கொண்ட மயிலிறகின்
புள்ளி அழிவதுண்டோ ? – குளிர்
பூம்புனல் வெள்ளத்தினாால்.
மண்ணில் நெடுங்காலம் – அந்த
மகாகவி வாழ்ந்திருந்தால்
பண்ணைப் பயிர்போலே – சந்தப்
பாடல் வளர்த்திருப்பான்.
கண்ணுக் கினியகவி – இன்ப
காவியம் தந்திருப்பான்
வண்ணக் குருத்தோலை – கத்தி
வாய்ப்பட் டழிந்ததுவே.
கழுகு மலைவளத்தைக் கதிர்
காட்டும் திணைப்புனத்தை
ஒழுகும் அருவியினை – எழில்
ஓவியக் காட்சியினைப்
பழகும் தமிழ்மொழியில் – அவன்
பாடி இருப்பதுபோல்
அழகு நயத்தோடு – பிறர்
ஆக்கல் எளிதல்லவே !