பக்கம்:புகழ்மாலை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

புகழ் மாலை

கொட்டாவித் தலைவ ரெல்லாம்
குனிந்துகொண் டிருந்த நாளில்,
வெட்டாத வாளும் நன்கு
விளையாத நிலமும் கைக்கே
எட்டாத கனியும் காயும்
இருந்தென்ன? வெள்ளைக் காரன்
பட்டாளம் என்ன செய்யும்
பார்க்கின்றேன் ஒருகை என்றார்.

வெள்ளாட்டின் தலையைக் காட்டி
ஒநாயின் கறியை விற்கும்
கள்ளிமுள் நெஞ்சம் கொண்ட
கயவர்வாழ் உலகில், அந்தப்
பிள்ளையோ தூய்மை யான
பிள்ளைப்பால் போன்றி ருந்தார்.
வெள்ளியா கறுக்கும், கட்டி
வெண்ணெயா நீரில் மூழ்கும் ?

இன்றுள்ள தலைவ ரெல்லாம்
ஏதேதோ செய்து செய்து,
குன்றுபோல் செல்வம் சேர்த்துக்
குவிப்பதாய்ச் சொல்கின் றார்கள்.
அன்றைய தலைவர் பிள்ளை
ஆதலால், பணமோ காசோ
ஒன்றுமே சேர்த்தாரில்லை !
உயர்ந்தவன் புகழ்தான் சேர்ப்பான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/30&oldid=1477120" இலிருந்து மீள்விக்கப்பட்டது