பக்கம்:புகழ்மாலை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

புகழ் மாலை



(கும்மி)


கண்ணில் கருணையும் கைதனில் நூலையும்
       கல்வியை நெஞ்சிலும் வைத்தவராம்.
மண்ணில் அடியையும் விண்ணில் புகழையும்
      மார்பில் மலரையும் வைத்தவராம்.
பொய்யழுக் கற்றநல் அந்தணராம் - புவி
      போற்றும் புதுமை புரிந்தவராம்;
செய்யும் செயலில் சிறந்தவராம் - பெருந்
     தேசத்தை வாழ்விக்க வந்தவராம்.

குழந்தையை நேசிக்கும் பண்டிதராம் - மூடக்
      கொள்கையைக் கண்டிக்கும் பண்டிதராம்
விழுந்த மழைத்துளி போன்றவராம் - புது
      விஞ்ஞான ஏக்கம் நிறைந்தவராம்.
சாதி மதங்கள் கடந்தவராம் - அவர்
      சத்திய கீர்த்தியைப் போன்றவராம்;
நீதியும் நேர்மையும் கொண்டவராம் -பகை
      நெஞ்சிலும் நட்பாய் நுழைந்தவராம்.

தூங்கிய வேங்கை விழித்ததுபோல் - புகைத்
       தூக்கம் கலைந்த நெருப்பதுபோல்
ஆங்கிலர் ஆட்சியை நின்றெதிர்த்தார் - உயிர்
      அல்லவோ பாரதம் என்றுரைத்தார்.
ஆலையும் நற்கல்விச் சாலையு மேநமக்
      காலய மாகுமென் றேயுரைத்தார்.
மேலை நிலத்தவர் விந்தையைக் கண்டுநாம்
     வேடிக்கை பார்ப்பதோ என்றுரைத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/34&oldid=1491648" இலிருந்து மீள்விக்கப்பட்டது