54
புகழ் மாலை
சோலைகள் ஏற்படச் செய்தோன்–வீணர்
சோம்பேறிகள், நாட்டின் நோய்என வைதோன்.
நூலறிவை ஓங்கச் செய்தோன்–நன்
நூலுக்கு ஒர் உரை எழுதிடச் செய்தோன்.
கண் போன்ற தமிழை வளர்த்தோன் – பால்
காவடிச் சிந்துவின் காரண கர்த்தர்
அண்ணமலை ரெட்டியார்க்கு–ஆடை
ஆபரணம் மிக அதிகம் அளித்தோன்.
ஊற்றுமலை சீதக் காதி–இவர்
உயர்ந்த அறிஞர்! பெருந்தர்க்க வாதி.
போற்றும் படிவாழ்ந்த சோதி–தமிழ்ப்
புலவரிடம் தினம் பேசும் அந்தாதி.
வயிற்றைத் தடவிடும் தொல்லை–இவர்
வாழ்ந்திட்ட காலத்துப் புலவர்க்கு இல்லை.
மயக்கும் அரசியல் சொல்லை–நம்
மந்திரிபோல் இவர்சொன்னதே இல்லை!
குறவன் மலையை நினைப்பான்–நெல்
கொடுக்கும் நிலந்தனை உழவன் நினைப்பான்
மறுவற்ற தமிழை இதுபோல்–இந்த
மருதப்பரும் தினம் நினைப்பார்–நினைத்தார் !
தலைப்பாகை இவருக்குப் பிடிக்கும்–சில
சமயத்தில் இவர்வாய்க் கவிதைகள் வடிக்கும்.
மலைவளம் இவருக்குப் பிடிக்கும்–செத்த
வடமொழி உயர்வெனில் இவர் ரத்தம் துடிக்கும்.