உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய பொலிவு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

அழகா இருக்கும்....." என்று அவன் சில வேளைகளில் அழைப்பான். அவன் கண்கள் வேறு ஏதேதோ பேசும். செல்லாயிக்கு சிரிப்பு வரும். கோபமும் பயமும் வந்தவள் போலாகி "அம்மாடியோ......" நான் மாட்டேன்..... யாராச்சும் பார்த்தூட்டா......?" என்று கேட்டுவிட்டு, ஓடி விடுவாள்.

"பயங்காளிப் புள்ளே! சுத்த பயந்தாங்கொள்ளி...... என்று கேலியாகக் கூறுவான் வேலப்பன் ; கூறிக்கொண்டே சுற்று முற்றும் பார்த்துக் கொள்வான், யார் கண்ணிலாவது பட்டுவிட்டோமோ என்ற பயத்தால்!!

"சாமி சாட்சியாச் சொல்றேன், அப்பாரு பேசிகிட்டு இருந்ததை நான் என் காதாலே கேட்டேன், உனக்குத்தான் என்னைக் கட்டிவைக்கப் போறாங்க....." என்று செல்லாயி ஒரு நாள், அவனுக்குத் தைரியமளிப்பாள்; பிறகோர் நாள், அவளே பயந்த நிலையில், 'மூணுமுடி' போட்டாத்தான் நல்லது என்று யாராரோ சொல்கிறார்கள் என்று கவன மூட்டுவாள்!

இதற்கிடையிலே, பொரிவிளங்காய் உருண்டைகள் அவனுக்குக் கிடைக்கும், நகக்குறி இவளுக்கு!! உரம் அதிகம் தேவைப்படாமலே, எல்லாப் பயிரும் செழிப்பாக வளரும் கிராமமல்லவா, காதல் மட்டும் என்ன விதிவிலக்கா! கவர்ச்சி கரமாக வளர்ந்து வந்தது.

குச்சிக் கிழங்குதான் இனி ஆகவேண்டிய காரியத்தை ஆகும்படிச் செய்யவேண்டும்..... அது ஓங்கி வளர்ந்து, உருவம் பெறுவதற்கான உழைப்பினை, தட்டாமல் தயங்காமல் வேலப்பன் கொட்டினான்—பயிரும் அருமையாக வந்தது—கிழங்கும் தரம்தான் என்று தெரிந்தது—ஆனால் 'பலன்' எதிர்பார்த்தபடி கிடைக்கவில்லை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பொலிவு.pdf/11&oldid=1575581" இலிருந்து மீள்விக்கப்பட்டது