உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய பொலிவு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

கோலமே மாறிவிட்டது. வேலப்பன், கள்ளச்சாராய விற்பனையில் கை தேர்ந்தவனாகிவிட்டான்; அவன் மட்டும் 'காச்சினது' சாப்பிடமாட்டான், நாற்பதோ ஐம்பதோ, வீசி எறிந்தால், 'அசல்' கிடைக்கும், விஸ்கியோ, பிராந்தியோ, அதைத்தான் சாப்பிடுவான். மட்டம், இந்த பசங்களுக்கு! அதைச் சாப்பிட்டுவிட்டு குடல் வெந்து சிலது சாகும்—குளறிக் கூத்தாடி சிலது போலீசிலே சிக்கிக்கொள்ளும்—வேலப்பனுக்கு புதிய அந்தஸ்தே ஏற்பட்டு விட்டது, அந்த உலகத்தில்.

முதல் 'சில்க்' சட்டை தைத்துப் போட்டுக்கொண்ட போது, அவனுக்கு செல்லிமீது நினைவு சென்றது. அவன் கன்னமும் இந்தச் சட்டையும் உராய்ந்தால் எப்படி இருக்கும் ஆனந்தம் என்று எண்ணிப் பார்த்தான், விதவிதமான பட்டுச் சேலைகள், புது தினுசு ஜாக்கட்டுகள், பவுன் நகைகள் இவைகளை எல்லாம் வாங்கிக் கொடுத்து, செல்லி இவைகளால் தன்னை அலங்கரித்துக்கொண்டு எதிரே நின்று கொண்டு சிரித்துப் பேசுவாள்-கனவில்!!

பணம் சேரச் சேர, அவனுக்கு செல்லி என்ன நினைப்பாள், இது ஒரு பொழைப்பா என்று கேவலமாகப் பேசுவாளோ, எந்தச் சமயத்திலே போலீசிலே சிக்கிக்கொண்டு கம்பி எண்ணவேண்டிவருமோ அடி மடியிலே நெருப்பைக் கட்டிக்கொண்டு வாழ்வது ஒரு வாழ்வா, என்று வெறுப்போடு கேட்பாளோ என்றெல்லாம்எண்ணம் சென்றது. மொத்தமாக ஒரு ஆயிரம் சேர்ந்ததும், போதும், இத்தோடு கிராமம் போய்விடுவோம். கலியாணம் செய்துகொண்டு செல்லியுடன் ஆனந்தமாக வாழலாம் என்று தோன்றிற்று. மறுபடியும், சே! விற்றுவிட்டு வந்த நிலத்தை திருப்பி வாங்காமலா அந்தக் கிராமத்திலே காலடி எடுத்துவைப்பது என்று தோன்றிற்று. இன்னும் கொஞ்சகாலம் என்று தனக்குத்தானே கூறிக்கொண்டான். மூன்று நாலு ஏக்கர் அயன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பொலிவு.pdf/33&oldid=1576216" இலிருந்து மீள்விக்கப்பட்டது