உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய பொலிவு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

உன்னை நம்பாமெ நான் வேறே யாரை நம்புவேன். என் மனசிலே அந்த நம்பிக்கை இல்லையானா, இப்படி உங்கூடப் பழகுவனா, பேசுவனா...ஆனா, 'எதுக்கும், ஆகவேண்டிய காரியத்தை காலகாலத்திலே முடிச்சுட வேணும்டி, ஆம்பிளைக மனசு ஒரு வேளைபோல மறுவேளை இருக்காது.... எந்தப் பாவிமகனாவது, கதைகட்டி ஊரிலே உபத்திரவத்தை மூட்டாத முன்னமேயே மூணுமுடி போட்டுகிடறதுதான் நல்லது'ன்னு இஞ்சிக் கொல்லையார் மக இருக்கா பாரு பருவதம், அவ சொல்றா...

இப்படித்தான் பேசத்தெரிந்தது அந்த வஞ்சிக் கொடியாளுக்கு. கிராமத்துக் கட்டழகி, எனவே அவளுக்கு, அன்பே! ஆருயிரே! இன்பமே! இன்னமுதே! இதய ஜோதி! என்ற முறையில் பேசத் தெரியாது. கண்ணாளா! தங்களைக் கண்டதும், கதிரவனைக் கண்ட கமலம் மலருவதுபோல என் அகமும் முகமும் ஒருசேர மலருகிறது; வீணையின் நரம்புகளை இசைவல்லான் தொட்டுத்தடவி இனிய கானத்தைப் பிறந்திடச் செய்வதுபோல, என்னைத் தொட்டிழுத்து முத்தமிட்டதும், எனக்கு வாழ்வின் கீதம் வசீகரமாகக் கேட்கிறது, என்றெல்லாம் 'வசனம்' பேசத்தெரியாது; அவள் அப்படிப் பட்ட வசனங்களைச் சினிமாவில் இரண்டோர் முறை கேட்டதுண்டு— அப்போதுகூட அவள், எப்படி வெட்கத்தைவிட்டு இப்படியெல்லாம் பேசிக்கொள்கிறார்கள் என்று எண்ணிக்கொள்வாள். அவள் கல்லூரிப் பெண்ணல்ல, காதலுக்காகச் சாம்ராஜ்யங்களை இழக்கத் துணிந்தவர்கள், வாள் முனையை எதிர்த்தவர்கள், ஊர்ப்பகையை ஏற்றுக் கொண் உவர்கள்,உருமாறிப் போனவர்கள், உன்மத்தரானவர்கள் ஆகியோர் பற்றிய கதைகளைப் படித்ததில்லை. அவள் கேட்ட இரண்டொரு கதைகளிலே துக்கப்படவும் கஷ்டப் படவும்தான் பெண் ஜென்மம் இருக்கிறது என்றுதான் தெரிந்து கொண்டிருந்தாள். மல்லிகையின் மணம், ஆகா! மனதுக்கு அளிக்கும் இன்பத்துக்கு ஈடானது வேறெது-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பொலிவு.pdf/7&oldid=1575578" இலிருந்து மீள்விக்கப்பட்டது