உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய பொலிவு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

வேலப்பனுக்கு ஒரு குடும்பம் அமைய வேண்டும்" என்று கிராமத்துக் கிழவர்கள் பேசிக் கொள்வார்கள்.

" அவனுக்கு மட்டும் தெரியாதா? தெரிஞ்சுதான், வேலப்பன், நம்ம சடையாண்டி மக இருக்காளே, செல்லி, அவளைச் சுத்திச்சுத்தி வட்டமிட்டுக்கிட்டு வாரான்..." என்று குறும்புத்தனமானவர்கள் பேசுவார்கள்,

"அடச்சே! இவனைப் பாரு! வயசுக் காலத்திலே இதெல்லாம் நடைபெறத்தானே செய்யும். எல்லோருமேவா, இவனைப்போல் சுடுமூஞ்சிச் சுப்பனாக இருப்பானுக...ஒவ்வொருத்தரும், அந்தப் பருவத்திலே, ஓடி ஆடிப் பாடிக்கிட்டுத்தான் இருப்பாங்க...பய, தப்புதண்டா பேர்வழி இல்லா, செல்லி இருக்காளே அவளும், சூதுவாதில்லாமே பேசிச் சிரிப்பாளே தவிர, பழிபாவத்துக்குப் பயந்த பொண்ணு; அடே அப்பா! சடையாண்டி என்ன இலேசுப் பட்டவனா? துளி சந்தேகம் வந்தாலும்போதும், சீவிடுவான் தலையைச் சீவி!" என்று அனுபவமிக்க பெரியவர் கூறுவார்.

செல்லி—வேலப்பன் காதலில் கடும்புயல் ஏதும் வீசவில்லை. மூன்றாவது 'ஆசாமி' யாரும் குறுக்கிட்டு அமளி மூட்டவில்லை. சடையாண்டியும் தடைகூற வில்லை. கலியாணத்தைச் சுருக்கமாக முடித்துவிட வேண்டும், என்று வேலப்பனிடம் சடையாண்டி 'ஜாடைமாடையாகச் சொல்லியும் விட்டான். கிராமத்துக்கு ஒரு நல்ல விருந்து விசேஷம் நடத்துகிற அளவுக்குக் கொஞ்சம் 'காசு' சேரட்டும் என்று. வேலப்பன் காத்துக் கொண்டிருந்தான். அதற்காக அவன் பலமாதிரி யோசனைகள் செய்வதுண்டு. செல்லாயிக்கு, வெள்ளைக்கல்லிலே கம்மலும், சிகப்புக்கல்லிலே மூக்குத்தியும், காலுக்கு வெள்ளியிலே கொலுசும், கழுத்துக்கு ஏதாச்சும், செய்துபோட்டு, கிராமத்தாருக்கெல்லாம் 'ஒரு வேளை சோறு' போட்டு, கலியாணத்தை 'கம்பிரமாக'ச் செய்ய வேண்டும் என்பது வேலப்பன் ஆசை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பொலிவு.pdf/9&oldid=1559268" இலிருந்து மீள்விக்கப்பட்டது