பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியப் படைப்பின் பின்னணி

13

சுதந்திரம் பற்றி முழங்கியவர்கள். இச்சுதந்திரம் போலியானது. உண்மையில் ஏகபோகத்தின் அடிமைகளாக இருத்தலே தங்களுக்கு விதித்த விதியோ என்று எண்ணினர். அந்நிலையையும் ஒப்புக்கொள்ள முடியாமல், சுதந்திரத்தையும் விட்டுவிட விருப்பமில்லாமல் சிக்கித் தவித்தனர். ஏகபோக வளர்ச்சியின் போது, வர்க்கபோதம் கொண்ட தொழிலாளி வர்க்கம் அதனை எதிர்த்துச் சமூக மாறுதலுக்காக, சோசலிசத்தைத் தனது குறிக்கோளாகக் கொண்டு போராடியது. அது கூட்டு அமைப்பு. கூட்டு அமைப்பான சோசலிசத்திற்குப் போராடியது. தங்கள் தனி உணர்வை, அக்கூட்டு உணர்வோடு இணைத்துக்கொள்ள ‘தனி மனிதச் சுதந்திரப் பற்று’ இடந்தரவில்லை. இவ்வாறு ஊசலாடிய சிறு முதலாளியும் நடுத்தர வர்க்கத்தினரும், வருங்கால நம்பிக்கையிழந்து, சோர்வுற்றுச் சோகக் குரலில் சமூகக் கொள்கைத் தத்துவங்களையும் இலக்கியங் களையும் உருவாக்கினர்.

அக்காலத்தைப் பற்றி மாக்சிம் கார்க்கி கீழ்வருமாறு கூறுகிறார்: -

ஒரு நீதி நெறிக்கொள்கையை உருவாக்க, ஒருவரை யொருவர் கடித்துத் தின்பதற்கு வெறிகொண்ட இவர்கள் முயன்றனர். கூர்மையான தன்னுணர்வும் தன்னோக்கு முடையவர்கள் தங்களைப் போன்றே அடுத்தவர்கள் இருந்தால் பொறாமையும் பகைமையும் கொண்டனர். மனித உறவுகளில் ஒருவர் மற்றொருவர் மீது பொறாமையும் சந்தேகமும் கொள்வது சாதாரண நிலைமையாயிற்று. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுதல் கால வழக்கமாயிற்று. நல்ல உடல் நலமுள்ளவர்கள் இரண்டு மாதத்தில் பித்துக்குளிகளாகவும் சித்த விகாரமுள்ளவர்களாகவும் ஆயினர். நேற்று வரை நண்பர்களாக இருந்தவர்களை, அலட்சியத்தோடு அற்பமாக நினைக்கும் மனநிலைக்கு மாறினர்.

நமது அறிவாளிகளின் ‘தனி மனித சுதந்திர உணர்வு’ சித்தப்பிரமைக்கும் முழுப் பைத்தியத்திற்கும் அவர்களை ஆளாக்கியது. இவ்வாறு ‘தனிமனிதம்’ என்ற கொள்கையுடையவர்களது உள்ளங்கள் ஒடிந்து, மனம் குழம்பி, உயர்வு எண்ணங்கள் குன்றி பள்ளத்தில் வீழ்ந்து விட்டனர். இவர்கள் மனநோயால் பிடிக்கப்ப்ட்டு உளறுகிறார்கள். தங்கள்மீது கழிவிரக்கம் கொண்டு கதறுகிறார்கள். தங்கள்மீது பிறரும் இரக்கம் காட்டவேண்டும் என்று.

உரக்கக் கூவுகிறார்கள்.