பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தற்கால இலக்கியப் படைப்புக் கொள்கைகள்

23

பெற்றது. காலப் போக்கில் தனது சுரண்டல் முறைக்கு விரோதமான சுதந்திரம், ‘சமத்துவம், சகோதரத்துவம்’என்ற மும்மணிக் கொள்கையைக் கைவிட்டது.‘லாபத்துக்காக உற்பத்தி’ என்ற இரக்கமற்ற கொள்கையைக் கடைப்பிடித்தது. முதலாளித்துவ முறையின் கொடுமைகளும் அதன் கோரசொரூபமும் வெளிப்படையாகத் தோன்ற ஆரம்பித்தன. இந்நிலையில் மனிதநேசம் கொண்டிருந்த எழுத்தாளர்கள், மனிதநேச அடிப்படையில் நின்று முதலாளித்துவக் கொடுமைகளையும் அநீதிகளையும் எதிர்த்து எழுதினர். அநீதியற்ற சமுதாயத்தைத் தமது கற்பனையால் படைத்து, அது போன்றதொரு சமுதாயத்தை நடைமுறையில் படைக்க வேண்டுமென விரும்பினர். அச்சமுதாயத்தில் இன்பமுற வாழ வேண்டுமென விருப்பம் தெரிவித்தனர். இவர்கள் தனிச் சொத்துரிமையே கொடுமைகளுக்கும் துன்பத்திற்கும் காரணம் என்று கருதி, அதனை மாற்றிப் பொதுச் சொத்துரிமை அடிப்படையில் சமுதாயத்தை அமைக்கவேண்டும் என்றனர். ஆனால், சமுதாய மாறுதல்கள் குறித்த புறவயச் சமுதாய வளர்ச்சி விதிகளை ஆராய்ந்து அறியாததாலும் உலகாயத உலகக் கண்ணோட்டம் இல்லாததாலும் இவர்கள் கற்பனைக் கனவுகளிலே மூழ்கினர். இக்கொள்கைகளின் பிரதிநிதிகள் தாமஸ் மூர், காம்பனெல்லா, ராபர்ட் ஓவன், ஸெயன்ட் ஸைமன் முதலியோராவர்.

இவர்களுள் ஸெயன்ட் ஸைமன் சமுதாய வளர்ச்சிப் போக்கின் தன்மையை மிக நெருக்கமாகக் கண்டார். சமுதாய வளர்ச்சிப் போக்கில் சொத்துரிமை, வர்க்கங்கள் இவற்றின் பாத்திரத்தை அறிந்திருந்தார். ஆனால் விஞ்ஞான அறிவின் முன்னேற்றம், நல்லொழுக்கம், சமயம் ஆகியவை சமூக மாற்றங்களின் உந்து சக்தியென்று நம்பினார்.

ஐரோப்பியக் கவிதை வரலாற்றில் மேற்கூறிய சமுதாயச் சூழ்நிலையில் மனிதநேசவாதத்தில் ஒரு புதிய வளர்ச்சிப் போக்கு உருவாயிற்று. இது 1820-30க்கு இடைப்பட்ட காலத்தில் தோன்றியது; 1789இல் நடைபெற்ற பிரெஞ்சுப் புரட்சியின் வீச்சு ஐரோப்பா முழுவதும் எதிரொலித்தது. பல நாடுகளில் மக்கள் நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டங்களில் இறங்கினர். பல நாடுகளை அடிமைப்படுத்தி ஆண்ட சக்கரவர்த்திகளை எதிர்த்துத் தேசிய விடுதலைப் போராட்டங்கள் எழுந்தன. அக்காலத்தில் தொழிலாளர் வர்க்கப் போராட் டங்கள் முனைப்பாகத் தோன்றவில்லை.

அதே சமயம் பிரெஞ்சுப் புரட்சியில் வெற்றிபெற்று ஆதிக்கத்தைக் கைப்பற்றிய முதலாளி வர்க்கம், மக்களை அடிமைப்