பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

நா. வானமாமலை

படுத்திச் சுரண்டலை முதலாளித்துவ முறையில் நடத்தியது. இதன் விளைவுகள் மக்களிடையே அவர்கள் மீது அவநம்பிக்கையை வளர்த்தது.

நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்துப் போராட மக்களைத்திரட்டப் பயன்பட்ட ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’என்ற கொள்கைகளைப் பொதுமக்களுக்காக அல்லாமல், தங்கள் வர்க்கத்திற்காக முதலாளிகள் செயல்படுத்திக் கொண்டனர். பேச்சுக்கும் செயலுக்குமுள்ள முரண்பாட்டை மனித நேசவாதிகள் கண்டனர்.

இச்சூழ்நிலையில்தான் இருவகையான கற்பனைவாதிகள் (Romanticists) இலக்கிய உலகில் தோன்றினர். இவர்களில் இரு பிரிவினரை இனம் காணமுடியும். இவர்கள் முதலாளித்துவச் சமுதாயத்தின் மீது வெறுப்புக்கொண்டு, அழிந்துவிட்ட நிலவுடைமைச் சமுதாயத்தின் சாயலில், கற்பனையில் பல சித்திரங்களைத் திட்டினர். இவர்கள் பழமையை உயிர்ப்பிக்க முயன்றவர்கள். இவர்களை (Romantic revivalists) பழமைக் கற்பனைவாதிகளென அழைக்கலாம். முதலாளித்துவப் புரட்சியில் நம்பிக்கை இழந்துவிட்ட இவர்கள், முதலாளித்துவத்தை எதிர்க்க திரண்ட மக்களைக் கண்டும் அஞ்சினர். எனவே புதிய சுடராக ஒளிவீசத் தொடங்கியிருக்கும் முதலாளித்துவஎதிர்ப்புணர்ச்சியில் இவர்கள் ஒன்றுபடவில்லை. பிரிந்தே நின்று பின்னோக்கிச் செல்ல முயன்றனர். எனவே அதிகக் கற்பனைப் படைப்புகளையும் பயங்கரக் கனவுச் சித்திரங்களையும் இவர்கள் தீட்டினார்கள். இப்போக்கின் பிரதிநிதிகள் பிரான்ஸ் நாட்டில் நோவாலிஸ், ரஷ்ய நாட்டில் ஷுகாவல்ஸ்க், ஜெர்மனியில் கால்பாக் முதலியோர்.

இரண்டாவது பிரிவினரும் முதலாளித்துவத்தில் நம்பிக்கையிழந்தவர்களே. ஆனால் நிலப்பிரபுத்துவ முறையையும் இவர்கள் எதிர்த்தவர்கள். எனவே இவர்கள் பின்னோக்கிச் செல்ல முயலவில்லை. இவர்கள் முற்போக்கான நிலையில் நின்று, முதலாளித்துவத்திற்கு எதிராகப் பரந்த சமூக வர்க்கங்களின் எதிர்ப்பை வெளியிட்டார்கள். இவர்கள் தேசிய விடுதலைப் போராட்டங்களை ஆதரித்தார்கள். விடுதலையை உயர்ந்த குறிக்கோளாகக் கொண்டு வழிபட்டார்கள். மனிதநேசத்தின் எல்லையை விரிவாக்கி, ஆழமுடையதாக்கினார்கள். மக்களின் நலன்களில் ஆர்வம் கொண்டிருந்தனர். வருங்காலத்தை நோக்கி முன்னேற முயன்றனர். இந்த இலக்கியப் போக்கிற்கு பைரன், ஷெல்லி, விக்தர் ஹியூகோ ஜார்ஜ்ஸாண்டு, சோபின் முதலியோர். பிரதிநிதிகள். ஷெல்லி, அரசனையும் மதகுருமார்களையும் கடவுளையும் மனிதனது விரோதிகளெனக் கருதி-