பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புதுக்கவிதையின் உள்ளடக்கம்

35

நின்று விளக்கியுள்ளனர். இங்கே புதுக் கவிஞர் இருளில் துழாவுகிறார். வாழ்க்கை என்றால் என்ன என்பதை விளக்க நம்மைக் கேள்வி கேட்கிறார். கேட்டுக் கொண்டிருக்கட்டும். அடுத்த கவிஞர் என்ன சொல்லுகிறார் என்று பார்க்கலாம்.

அடுத்த கவிஞர் ஞா. மாணிக்கவாசகம் வாழ்க்கையைப் பயணமாக உருவகப்படுத்துகிறார்:

விதி வழியே செய்த
வினை வழியே போகின்றேன்
போகுமிடம் வேறில்லை
புதிய தடம் காணுதற்கு
பொழுதில்லை ஆதலினால்
விதி வழியே செய்த

வினை வழியே போகின்றேன்

வாழ்க்கைப் பயணம் பற்றி ஆயிரமாயிரம் ஆண்டுகளாக உலக மறுப்புவாதிகளான பெளத்தரும் சமணரும் கூறும் விதி தான் வாழ்க்கையைப் பிடரி பிடித்து உந்துகிறது; புதிய தடம் ஒன்றுமில்லை; அதைக் காணப் பொழுதும் தமக்கு இல்லை என்கிறார் கவிஞர். இதில் புதிய உள்ளடக்கம் என்ன இருக்கிறது. என்பது நமக்குப் புரியவில்லை. புதுக் கவி மரபின் தத்துவமான தனி மனிதச் சுதந்திரத்திற்குக்கூட இது விரோதமாக இருக்கிறது. சாவு ஒன்று தான் நிச்சயம் என்ற சாக்குருவி வேதாந்தம் நமக்குப் புதிதல்ல. அதனையும் கவிதையின் கடைசிப் பகுதியில் கூறுகிறார்:

பூத்தமலர் வாடும்
புதியகனி அழுகிவிடும்
சாவுக் கோவிலிங்கே
வாவென்ற ழைக்கின்ற
சங்கீதம் கேட்கிறது
போகின்ற விதிவழியே

போய் முடியும் வினைவழியே.

இந்தக் கருத்தை வல்லிக்கண்ணனும் கூறுகிறார்:

நடந்தே அழியணும் வழி
கொடுத்தே தீரணும் கடன்
செய்தே அழியணும் வேலை

அழுதே அழியணும் துக்கம்